சென்னைக்கு பக்கத்தில் 4 இடங்கள்.. கொசஸ்தலை ஆற்றில் நடக்க போகும் பெரிய மாற்றம்.. ரெடியாகும் அரசு
சென்னை: கடலில் வீணாக கலக்கும் நீரை சேமித்து சென்னைக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புதிதாக கொசஸ்தலை ஆற்றில் குறுக்கே 4 நீர் தேக்கங்களை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆய்வுக்கு ரூ.5.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரமாநிலம் கிருஷ்ணாபுரத்தில் உருவாகும் கொசஸ்தலை ஆறு, வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக, பூண்டி நீர்த் தேக்கத்தை அடைகிறது. அங்கிருந்து திருவள்ளூர், சென்னை வழியாக ஓடி எண்ணூரில் வங்கக் கடலில் கலக்கிறது. பூண்டி நீர்த்தேக்கத்திற்கு மேலே தாமரைப்பாக்கம் அணைக்கட்டு, மீஞ்சூர் அருகே சீமாபுரம் அணைக்கட்டு, வள்ளூர் அணைக்கட்டு ஆகியவை கொசஸ்தலை ஆற்றில் உள்ளன.

தாமரைப்பாக்கம் அணைக்கட்டு, மீஞ்சூர் அருகே சீமாபுரம் அணைக்கட்டு, வள்ளூர் அணைக்கட்டுகளில் சேமிக்கப்படும் நீர் அந்த பகுதிகளில் பாசனத்திற்கு பயன்படுகிறது.பூண்டி நீர்தேக்கத்தில் சென்னை குடிநீருக்காக பயன்படுகிறது. இந்த கொசஸ் தலை ஆற்றில் நீர்பிடிப்புப் பகுதி 3,757 சதுர கிலோமீட்டர் ஆகும். ஆற்றுப் படுக்கையின் அகலம் 150 முதல் 250 மீட்டர் வரை உள்ளது.
கொசஸ்தலை ஆற்றின் அதிகப்டச கொள்ளளவு வினாடிக்கு 1,25,000 கன அடியாகும் சராசரி கொள்ளளவு 1,10,000 கன அடி. அதிகபட்சமாக 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது வினாடிக்கு 90,000 கன அடி நீர் ஓடியது. அப்போது மட்டும் கொசஸ்தலை ஆற்றிலிருந்து சுமார் 20 டிஎம்சி உபரி நீர் கடலில் கலந்தது.
2015ம் ஆண்டில் இல்லை.. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையின் போது கொசஸ்தலை ஆற்றுக்கு வரும் நீர் பூண்டி நீர்த்தேக்கம் நிறைந்த பின்னர் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளமாக பெருக்கெடுத்து எண்ணூர் வரை சென்று வீணாக கடலில் கலப்பது வழக்கமாக உள்ளது. ஹ
லவ, குச மற்றும் நந்தியாறு, கல்லாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் கேசாவரம் ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி அவை தான் கொசஸ்தலை ஆற்றுக்கு வருகின்றன. இதுதவிர ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீராலும் தண்ணீர் கிடைக்கிறது. இதனால் கிருஷ்ணா நதியில் நிரம்பி வழிந்தால் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் வெள்ளமாக பாயும். அப்போது அந்த தண்ணீரை குடிநீருக்காக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது . இதன் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு முதல், 2022-ம் ஆண்டு வரை சுமார் 30 டிஎம்சி உபரிநீர், கொசஸ்தலை ஆற்றில் வீணாகாக கடலில் கரைந்தது.
இப்படி வீணாகும் வெள்ள நீரை சேமித்து வைக்க ஏதுவாக திருவள்ளூர் மாவட்டத்தில், கொசஸ்தலை ஆற்றில் 4 இடங்களில் நீர்த்தேக்கங்கள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்று தமிழக அரசு ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இதற்கு ரூ.5.6 கோடியை ஒதுக்கீடு செய்து, சமீபத்தில் தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டது.
இதன்படியே திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த் தேக்கத்தின் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதிகளில் 4 இடங்களில் நீர்த்தேங்களை அமைப்பதற்கான ஆய்வுப் பணி நடந்து வருகிறது.
தற்போதைய நிலையில் கேசாவரம் அணைக்கட்டுக்கும், மணவூர் ரயில்வே பாதைக்கும் இடையே ஒரு நீர் தேக்கம் அமைக்கவும், மணவூர் ரயில்வே பாதைக்கும், பட்டரைபெரும்புதூர் தடுப்பணைக்கும் இடையே ஒரு நீர்தேக்கம் அமைக்கவும், பூண்டி நீர்த்தேக்கத்துக்கும் தாமரைப்பாக்கம் அணைக்கட்டுக்கும் இடையே ஒரு நீர் தேக்கம் அமைக்கவும், தாமரைப்பாக்கம் அணைக்கட்டுக்கும், இருளிப்பட்டு தடுப்பணைக்கும் இடையே ஒரு நீர் தேக்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கண்ட 4 இடங்களில் நீர்தேக்கம் அமைப்பதற்கான ஆய்வுப் பணியை அடுத்த 6 மாதங்களில் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள்.
ஆய்வுன் முடிவில் நீர்தேக்கம் அமைக்க முடியும் என்பது தெரியவந்தால் ஆற்றின் கரைகள் உயர்த்தப்படும். நீர்த்தேக்கங்கள் அமைக்க, திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்படும். பின்னர் தமிழக அரசின் அனுமதி பெற்று, நீர்த்தேக்கங்கள் அமைக்கும் பணி நடைபெறும். இந்த நான்கு நீர் தேக்கங்கள் அமைக்கப்பட்டால் சுமார் 2 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும். அப்படி சேமித்தால் நீர் தேக்கம் அமைய உள்ள பகுதிகள் பாசன வசதி பெறுவதுடன் நிலத்தடி நீர் மட்டமும் உயரும். சென்னைக்கும் குடிநீர் தேவை ஓரளவு பூர்த்தியாகும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications