பத்திரப்பதிவு செய்வோருக்காக ஒரே நாளில் இரண்டு உத்தரவுகளை போட்ட தமிழக அரசு.. நோட் பண்ணுங்க
சென்னை: தமிழக அரசு பத்திரப்பதிவுத்துறை மூலமாக ஆவணப்பதிவுகள் மட்டுமல்லாமல் திருமணங்கள் பதிவு செய்தல் உள்பட பல்வேறு சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் பத்திரப்பதிவு செய்வோருக்காக ஒரே நாளில் இரண்டு உத்தரவுகளை போட்டிருக்கிறது. பத்திரப்பதிவு செய்வோரை நிற்க வைக்ககூடாது என்று பதிவுத்துறை கூறியுள்ளது. அதேபோல் பட்டா மாற்றம் தொடர்பாகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
முதலில் சார் பதிவாளர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை பார்ப்போம். தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனைத்து மாவட்ட பதிவாளர்கள் மற்றும் சார்பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை உத்தரவில் கூறுகையில், "தமிழக அரசு பத்திரப்பதிவுத்துறை மூலமாக ஆவணப்பதிவுகள் மட்டுமல்லாமல் திருமணங்கள் பதிவு செய்தல் உள்பட பல்வேறு சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. அதனை பயன்படுத்தும் விதமாக ஏராளமான பொதுமக்கள் சார்பதிவாளர்கள் உள்ளிட்ட அலுவலர்களை நேரடியாக சந்திக்கின்றனர்.

அப்போது சார்பதிவாளர் அலுவலகங்களில் சார்பதிவாளர் மற்றும் இளநிலை உதவியாளர் மேஜைக்கு எதிர்புறம் நாற்காலிகள் கண்டிப்பாக போடப்பட வேண்டும். ஒவ்வொரு அலுவலருக்கு முன்னால் குறைந்தபட்சம் 2 நாற்காலிகள் போடப்பட்டு இருக்க வேண்டும். பொதுமக்களை நாற்காலியில் அமர வைத்துத்தான் பேச வேண்டும். எந்த சூழ்நிலையிலும் அவர்களை நிற்க வைத்து கொண்டு பதில் அளிக்க கூடாது. இந்த அறிவுரைகளை மீறினால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது உத்தரவு வருவாய் துறையில் இருந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. பட்டா தொடர்பாக இந்த உத்தரவு வந்திருக்கிறது. தமிழக அரசின் நில நிர்வாக ஆணையர் கே.எஸ்.பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறுகையில், "தமிழகம் முழுவதும் உள்ள கிராம மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு இருக்கிறது. அதனை பொதுமக்கள், https://eservices.tn.gov.inஎன்ற இணையதளம் வழியாக பார்க்கலாம். பல சிட்டாவில் உள்ள பட்டாதாரர்களில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளன. அவர்களின் பெயர்களுக்கு பதிலாக வாரிசுதாரர்களின் பெயர்கள் அல்லது தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன.
எனவே பட்டாவில் உள்ள இறந்த நில உரிமையாளர்களின் பெயர்களை நீக்கி, வாரிசுதாரர்கள் அல்லது உரிமம் பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க, உரிய ஆவணங்களுடன், இ-சேவை மையங்கள் அல்லது தமிழ் நிலம் https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற 'சிட்டிசன் போர்டல்' வழியாக விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள், ஆவணங்கள் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக, உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் மாற்றங்கள் செய்யப்படும்.
இதை மாவட்ட கலெக்டர்கள் மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும். உரிய ஆவணங்கள் இணைக்காததால், பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இதை தவிர்க்க, மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் இ-சேவை மைய பணியாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அவர்களுக்கு உரிய தெளிவுரைகள் வழங்க வேண்டும். விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் பட்டியலை, இ-சேவை மையம் வெளியே ஒட்டி வைக்கவேண்டும்.
இந்த பவுத்தி பட்டா மாறுதல் தொடர்பாக, ஆன்லைனில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, காலதாமதமின்றி உரிய ஆணைகள் பிறப்பிக்க, தாசில்தார்களுக்கு உத்தரவிட வேண்டும். பட்டாவில் இறந்தவர் பெயரை நீக்கி வாரிசுதாரர்களை சேர்க்க இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்று, வாரிசில் எவரேனும் இறந்திருந்தால் அவரது வாரிசு சான்று, பட்டா மாறுதல் கோரும் நில புல எண்ணின் வில்லங்க சான்றிதழ், பதிவு செய்யப்பட்ட தான செட்டில்மெண்ட் பாகப்பிரிவினை போன்ற ஆவணங்களை இணைக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications