இலவச மின் இணைப்புகள்.. விவசாய நிலங்களில் இப்படி இருந்தால் சிக்கல்..! மின் துறைக்கு தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழகத்தில் விவசாய பயன்பாட்டில் அல்லாத இலவச மின் இணைப்புகளை மாவட்ட வாரியாக ஆய்வு செய்து கணக்கெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு மின்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நோக்கங்களுக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தமிழகத்தில் விவசாய பணிகளை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானது என்னவென்றால் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சார சேவையே ஆகும். தமிழகத்தில் 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.

இலவச மின்சார திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சர்வீஸ்கள் வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. நீர்நிலைகளில் வறட்சி ஏற்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் இல்லாத காலங்களில் பயிர்களுக்கு மின் மோட்டார்கள் மூலமே நீர் இறைத்து விவசாயிகள் பாய்ச்சுகிறார்கள். எனவே, விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் என்பது மிக முக்கியமானதாக உள்ளது.
விவசாயிகள் பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மின் இணைப்புக்கும் ஆண்டுக்கு ரூ.30,000 மின்சார துறைக்கு, வேளாண்துறை வழங்கி வருகிறது. விவசாய பணிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாகவும் இந்த நடவடிக்கைகளையும் சலுகைகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.
இந்த நிலையில் தான், விவசாய பயன்பாட்டிற்கு என மின் இணைப்பு பெற்று விட்டு அதை வேறு பணிகளுக்கு பயன்படுத்துவதாக மின்சார வாரியத்திற்கு புகார்கள் எழுந்துள்ளன. விவசாய பணிகளுக்கு இலவசமாக மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை விவசாய நிலங்களில் விவசாயம் சாராத பணிகளுக்கு பயன்படுத்தும் போது மின் நுகர்வு அதிகரிப்பதோடு, மின்சாரத்துறைக்கும் கடுமையான நிதி இழப்பு ஏற்படுகிறது.
ஏற்கனவே நிதி நெருக்கடியில் தள்ளாடும் தமிழக மின்சார வாரியத்திற்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பதால் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதாவது, மாவட்ட வாரியாக ஆய்வு செய்து விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகளை கணக்கெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய மின் வாரியத்திற்கு தமிழக அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நோக்கங்களுக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மின்சார வாரியம் தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications
