அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் முக்கிய உத்தரவு.. பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் நேரடியாக மற்றும் இ-மெயில் மூலமாக மக்கள் அளிக்கும் குறைகள் தொடர்பான மனுக்களின் மீது, மனு வாங்கிய அடுத்த 3 நாட்களுக்குள் மனுவை பெற்று கொண்டதற்கான ஒப்புகையை அதிகாரிகள் வழங்கிட வேண்டும். அதேபோல் பொதுமக்களிடம் இருந்து மனு பெறப்பட்ட ஒரு மாதத்திற்குள் குறைகள் களையப்பட வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம், அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் அளிக்கும் குறைகள் தொடர்பான மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டிருந்தது. மேலும் பொதுமக்களின் குறைகள் தொடர்பாக 30 நாட்களில் பதிலளிக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்திருந்தது. பொதுமக்களின் குறைகளை விரைவாகத் தீர்ப்பதற்காக இந்த உத்தரவினை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீதான நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுதல் தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், "அரசு அலுவலகங்களில் நேரடியாக மற்றும் இ-மெயில் மூலமாக பெறப்படும் குறை மனுக்களின் மீது 3 நாட்களுக்குள் மனுவை பெற்று கொண்டதற்கான ஒப்புகை வழங்கப்பட வேண்டும். மனு பெறப்பட்ட ஒரு மாதத்திற்குள் குறைகள் களையப்பட வேண்டும். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு கடந்தாண்டு நவம்பர் மாதம் 14-ந்தேதி வெளியிட்ட உத்தரவின் அடிப்படையில் மனுக்களை கையாளுதல் குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும், மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் செயலாளர்களும், கலெக்டர்களும் அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த உத்தரவை கடைபிடிக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மனுக்கள் மீதான நடவடிக்கையில் ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை தவறாது கடைபிடிக்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களில் பெறப்படும் மனுக்களை பதிவு செய்ய 'குறைகளை மனுப்பதிவேடு' ஒன்றினை பராமரிக்க வேண்டும். அந்த பதிவேட்டில் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பதிவு செய்திட வேண்டும். இந்த பதிவேடுகளை வாரம் அல்லது மாதம்தோறும் நடைபெறும் ஆய்வுக் கூட்டங்களின்போது சமர்ப்பிக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications