மத்திய அரசு நிதி ஒதுக்காத போதிலும்.. சத்தமே இல்லாமல் ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த தமிழக அரசு
சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் (சமக்ர சிக்ஷா அபியான்) கீழ் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவது வழக்கம். அப்படி ஒதுக்கப்படும் நிதியில் தான் பள்ளிகளுக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் இணையாத காரணத்தால், அந்த நிதி ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மத்திய அரசு நிதி ஒதுக்காத சூழலிலும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே சம்பளத்தை தமிழக அரசு வழங்கி உள்ளது.
2018-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் சமக்ரா சிக்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ). இந்த திட்டத்தின் நோக்கம் என்ன வென்றால், ப்ரீ.கே.ஜி முதல் 12-ஆம் வகுப்பு வரையில் அனைவருக்கும் தரமான சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டமாகும். ஆசியர்களுக்கு தரமான பயிற்சி அளிக்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்துள்ளது மத்திய அரசு. இந்த நிதி அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளிக்கல்வி சார்ந்த செயல்பாடுகள், திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது.

இந்நிலையில் 2024-2025-ஆம் கல்வி ஆண்டிற்கான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ரூ.3,586 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில், மத்திய அரசின் பங்களிப்பு ரூ.2,152 கோடி (60%) ஆகும். பொதுவாக இந்த தொகை நான்கு தவணைகளில் விடுவிக்கப்படுவது வழக்கம். இதில் மாநில அரசின் பங்கு ரூ.1,434 கோடி (40%) ஆகும். மத்திய அரசின் முதல் தவணை கடந்த ஜூன் மாதத்தில் கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் மத்திய அரசின் பங்களிப்பினைப் பெறுவதற்கு ஏதுவாக முன்மொழிவுகள் ஏப்ரல் 2024-லேயே சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், முதல் தவணையான 573 கோடி ரூபாய் கிடைக்கவில்லை. தற்போது செப்டம்பர் மாதத்துடன் 2-வது தவணையும் நிறைவு பெற்றுவிட்டது. ஆனால் 2 தவணைக்கான நிதியையும் மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் தமிழக அரசு இணைய மறுப்பதால்தான் அந்த நிதி விடுவிக்கப்படாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிதி ஒதுக்கப்படாததால், அந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வந்த ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கடந்த மாதம்சிக்கல் ஏற்பட்டது. இதனால் கடந்த செப்டம்பர் மாதத்துக்கான சம்பளத்தை தமிழக அரசு தன் சொந்த நிதியில் இருந்து வழங்கியது.
இதற்கிடையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிதியை ஒதுக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இதுவரை மத்திய அரசு நிதி வரவில்லை. இந்த நிலையில் மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டாலும், அக்டோபர் மாதத்துக்கான சம்பளத்தையும் தமிழக அரசு வழங்கியிருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு தமிழகத்தில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள நன்றி அறிவிப்பில், 'பகுதி நேர ஆசிரியர்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட அக்டோபர் மாத சம்பளம் ரூ.12,500-ஐ முன்கூட்டியே வழங்க நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டான், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருக்கு நன்றியை தெரிவிக்கிறோம்' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications