'பென்சன்'.. பல வருச காத்திருப்புக்கு விடிவு.. ஆசிரியர்களுக்கு வெளியான குட்நியூஸ்.. தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழகத்தில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, உரிய விதிப்படி ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடாது என்று தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பலன் கிடைக்க ஆண்டுக்கணக்கில் தாமதம் ஆகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது. இது தொடர்பாக ஆசிரியர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்கள். குறிப்பாக தொடக்க கல்வி துறையில் இதுபோன்ற புகார்கள் அதிகமாக உள்ளதுது.

இந்நிலையில் இனிமேல் தமிழகத்தில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, உரிய விதிப்படி ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளளதாவது: "' பள்ளி கல்வித்துறையில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓய்வூதிய பலன்கள் வழங்குவது, சில மாவட்டங்களில் தாமதமாவதாக ஆசிரியர்களிடம் இருந்து புகார்கள் உள்ளன. பொது வைப்பு நிதியான ஜி.பி.எப்., முதிர்வு தொகைக்கு கருத்துரு அனுப்பவும், மாவட்ட அலுவலகங்களில் காலதாமதம் ஆவதாக, பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலை, வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும். தொடக்க கல்வி பிரிவின் கீழ் செயல்படும் பள்ளிகளில் மட்டும், அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள் 1,892 பேர் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். இவர்கள் ஓய்வு பெற்றதும் உரிய பலன்களை, காலதாமதமின்றி பெறுவதற்கு ஏற்ப, அவர்களது விபரங்களை கேட்டு பெற்று, உரிய கோப்புகள் தயாரிக்கப்பட வேண்டும்.
அரசின் விதிப்படி, 6 மாதங்களுக்குள் இந்த விபரங்களை மாநில கணக்காயருக்கு அனுப்ப வேண்டும். நீதிமன்ற வழக்குகள், வேறு நடவடிக்கைகள் இருந்தால், அதனையும் முன்கூட்டியே உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
இனி, ஓய்வூதிய பலன் கிடைக்கவில்லை; ஆண்டுக்கணக்கில் தாமதமாகிறது என, ஆசிரியர்கள் தரப்பில் புகார் அளிப்பது போன்ற நிகழ்வு ஏற்படாமல், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்" இவ்வாறு தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications