இதுதான் ரொம்ப முக்கியம்.. அரசு பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. நோட் பண்ணுங்க.. தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கு முன்பு, செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து வழிகாட்டுதல்கள் வெளியாகி உள்ளன.. இதுகுறித்து தமிழக அரசு சொல்வது என்ன?
கடந்த டிசம்பர் 4-ம் தேதி கடந்து சென்ற மிக்ஜாம் புயல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியது. இதனால் தொடர்ந்து மீட்பு, நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்னும் பல்வேறு சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளநீர் வடியவில்லை.. மீட்பு, நிவாரணப் பணிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.. இதனால், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்..
பள்ளி கல்லூரி: இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாணவர்கள் நலன் கருதி சென்னை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு: இதைத்தவிர, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட 6 வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.. இந்நிலையில், பள்ளிகளை திறக்கும் முன் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குநர் அறிவொளி வெளியிட்ட அறிக்கை இதுதான்:
"பள்ளிகள் திறக்கப்படும் முன்னதாக பள்ளி வளாகங்களை முழுமையாக தூய்மை செய்ய வேண்டும். முட்புதர்கள் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். சுற்றுச்சுவர்கள் ஈரப்பதத்துடன் இருக்கும் என்பதால் மாணவர்களை அருகில் செல்ல அனுமதிக்க கூடாது. மழையால் பாதிக்கப்பட்ட வகுப்புகளை பயன்படுத்தாமல் பூட்டி வைக்க வேண்டும்.
பாதுகாப்பு வளையம்: இடிக்க வேண்டிய கட்டிடங்கள் இருந்தால் அவற்றை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும். வகுப்புகளில் உள்ள இருக்கைகளில் பூஞ்சை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். கழிப்பறை வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.
மின் இணைப்புகள் சரியாக இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், பள்ளி மேலாண்மை குழு உதவியுடன் பள்ளிகளுக்கு தேவையான வேறு சில அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications