திருவான்மியூரில் சுரங்கம் தோண்ட போன.. மெட்ரோ அதிகாரிகளுக்கு செம ஷாக்.. உள்ளே பார்த்ததும் வியப்பு!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான சுரங்கம் தோண்டும் பணி திருவான்மியூரில் விரைவில் தொடங்கவுள்ளது. திருவான்மியூர் மற்றும் இந்திரா நகர் இடையே, சுமார் 650 மீட்டர் தூரத்திற்கு இரட்டைச் சுரங்கங்கள் அமைக்கும் பணிகள் நவம்பர் மாதம் ஆரம்பமாகின்றன.
இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் (TBM) இந்தச் சவாலான பணிகளை மேற்கொள்ளும். மொத்தம் 118.9 கி.மீ நீளமுள்ள இரண்டாம் கட்டத் திட்டத்தில், மாதவரம் முதல் சிப்காட் வரையிலான 3வது வழித்தடம் 45.8 கி.மீ தூரம் கொண்டது. இதில் 26.8 கி.மீ தூரம் சுரங்கப்பாதையாக அமைக்கப்படவுள்ளது, அதில் திருவான்மியூர்-இந்திரா நகர் பகுதியும் ஒன்று.

திருவான்மியூர்-இந்திரா நகர் மெட்ரோ
சில வருடங்களில், மாதவரத்திலிருந்து புறப்படும் ரயில்கள் திருவான்மியூர், இந்திரா நகர் உட்பட 40க்கும் மேற்பட்ட இடங்கள் வழியாக சிப்காட்டை சென்றடையும். மெட்ரோ ரயில் அதிகாரிகள், திருவான்மியூர் நிலையப் பகுதியில் சில வாரங்களாக சுரங்கம் அமைக்கும் நடந்து வருவதாகவும், ஒரு சுரங்கம் தோண்டும் இயந்திரம் இறக்கப்பட்டுவிட்டதாகவும், மற்றொன்று விரைவில் இறக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
தற்போதைய முக்கிய சவால், இப்பகுதியில் காணப்படும் கடினமான பாறைகள். திருவான்மியூரில் கடினமான பாறைகள் இருக்கும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் கிரானைட் போன்ற உயர் தரமான பாறைகளாக இருக்கும் என்று நினைக்கவில்லை, இது எங்களுக்கு வியப்பு ஏற்படுத்துகிறது, கிரானைட் அங்கே இருக்கும் என்று நினைக்கவே இல்லை, இதை உடைப்பது கொஞ்சம் கடினம், என்று ஓர் அதிகாரி குறிப்பிட்டார்.
முதலில், ஒப்பந்ததாரர் வெடிவைத்து சுரங்கம் அமைக்க திட்டமிட்டிருந்தாலும், பின்னர் வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி பாறைகளைச் சிதைக்கும் மாற்று வழியைத் தேர்ந்தெடுத்ததாக அவர் மேலும் கூறினார். தற்போது, திருவான்மியூரில் 22 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதிக நேரம் எடுக்கும் பணிகள்
கடினமான பாறைகள் காரணமாக, திருவான்மியூர் மற்றும் இந்திரா நகர் இடையிலான 650 மீட்டர் சுரங்கப்பாதை பணி சற்று மெதுவாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, இத்தகைய குறுகிய தூரப் பணிகள் விரைவில் முடிவடைந்தாலும், இந்தப் பகுதிக்கு ஒரு வருடத்திற்கும் மேல் ஆகலாம்.
இயந்திரங்கள் தொடர்ந்து கடினமான பாறைகளில் துளையிடும்போது, அதன் வெட்டுத் தலைத் தகடுகள் விரைவில் தேய்ந்துவிடும். அப்போது, வெட்டுத் தலைச் செப்பனிடுதல் (cutterhead intervention) எனப்படும் செயல்முறையைச் செய்து பாகங்களை மாற்ற வேண்டும். இந்த 650 மீட்டர் தூரப் பாதையில் இரு இயந்திரங்களுக்கும் இந்தச் செப்பனிடுதல் பலமுறை தேவைப்படலாம், இது அதிக நேரம் எடுக்கும் செயல் என்று ஓர் அதிகாரி விளக்கினார்.
ஆவடி மெட்ரோ பணிகள்
ஏற்கனவே ஆவடி வழியாக செல்லும் மெட்ரோவிற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ₹2,442 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை உடனடியாகத் தொடங்க மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 21.76 கி.மீ தூரத்திற்கான இந்த புதிய மெட்ரோ வழித்தடம் கோயம்பேடு தொடங்கி பட்டாபிராம் வரை நீளும். இது கோயம்பேடு, ஆவடி, மற்றும் பட்டாபிராம் போன்ற முக்கிய பகுதிகளை இணைக்கும். சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நகரின் மேற்குப் புற வளர்ச்சிக்கு இத்திட்டம் பெரும் உந்துசக்தியாக அமையும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே நகரப் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேலும் இரண்டு புதிய வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரிக்க ஆலோசனை ஒப்பந்தங்களை வெளியிட்டுள்ளது. இதில் கலங்கரை விளக்கம் முதல் உயர் நீதிமன்ற மெட்ரோ வரையிலான வழித்தடம் 4-ன் நீட்டிப்பும், தாம்பரம்-கிண்டி-வேளச்சேரி இடையேயான புதிய வழித்தடமும் அடங்கும்.












Click it and Unblock the Notifications