சென்னை மழை பாதிப்புகளை தடுக்க சூப்பர் ஐடியா.. குறுகலான பாலங்களை இடித்து உயர்த்திக் கட்ட திட்டம்!
சென்னை: சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது அரசு. கால்வாயில் அதிக தண்ணீர் செல்ல முடியாமல் இருப்பதால் குறுகிய பாலங்களை இடித்து உயர்த்திக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மழைக்காலம் வந்தாலே சென்னை மக்கள் அச்சத்தோடு வாழவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சில மணி நேரங்களில் 5 செ.மீ மழை பெய்தாலே தாங்க முடியாத அளவுக்கு சென்னையை வெள்ளம் சூழ்ந்துவிடுகிறது, சாலைகள் எங்கும் மழைநீர் தேங்கி விடுகிறது. கட்டுமானங்கள் அதிகரித்ததன் காரணமாக மழைநீர் செல்ல வழியில்லாமல் போய்விடுகிறது.

மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து, அவ்வப்போது சீரமைக்கப்பட்டு வந்தாலும் கூட, பருவமழைக் காலம் வந்தாலே சென்னை மக்களுக்கு வெள்ள அபாயமும் வந்துவிடுகிறது. என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க முடியவில்லை.
இந்நிலையில், தமிழக அரசு, தலைநகர் சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுப்பதற்காக சில முக்கிய திட்டங்களை கையில் எடுத்துள்ளது. அதன்படி, குறுகிய பாலங்களை இடித்துவிட்டு, உயர்த்திக் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதன் மூலம் அதிக நீர் செல்ல முடியும் என்பதால் தண்ணீர் தேங்குவது தடுக்கப்படும்.
சென்னையில் நீர்வளத்துறை வசமிருந்த வேளச்சேரி வீராங்கல் ஓடை, விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. 6.5 கி.மீ நீளமுள்ள விருகம்பாக்கம் கால்வாயில் இருக்கும் குறுகிய பாலங்களால் 1,700 கன அடி நீர் செல்ல வேண்டிய இடத்தில் 800 கன அடி மட்டுமே செல்வதால், 12 குறுகிய பாலங்களை இடித்து உயர்த்திக் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
வடபழனி 100 அடி சாலையில் ஒவ்வொரு முறையும் மழையால் தண்ணீர் தேங்குவதற்கு, கால்வாயில் அதிக தண்ணீர் செல்ல முடியாததே காரணமாக இருப்பதால் குறுகிய பாலங்களை இடித்து உயர்த்திக் கட்டப்பட உள்ளன.
வரும் 2025 பிப்ரவரி மாதத்திற்குள் இந்தப் பணிகள் முடிக்கப்படும். இதனால் சுமார் 25 லட்சம் மக்கள், மழை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுக்காக்கப்படுவார்கள் என மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) சிவகிருஷ்ணமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.
இதேபோல, வேளச்சேரியில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதற்கு தீர்வாக 2.78 கி.மீ தூரத்திற்கு வீராங்கல் ஓடையின் பக்கவாட்டு சுவரை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஓடையில் தற்போது செல்லும் தண்ணீரை விட 25% தண்ணீர் கூடுதலாக செல்ல வழிவகை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications