விஜய் அரசின் முதல் பின்வாங்கல்! ரத்தன் பண்டிட் நியமனம் ரத்து
சென்னை: முதல்வர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் நியமிக்கப்பட்ட உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற்றது. விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருக்கு ஏன் அரசு பதவி என விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்த நிலையில் இந்த உத்தரவை தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது.
முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரும், தவெக செய்தித் தொடர்பாளருமான ரிக்கி ராதன் பண்டிட், விஜய்யுடன் 7 ஆண்டுகளாக ஆலோசனைகளை வழங்கி வருகிறாராம். இவர் இதற்கு முன்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ஆலோசகராக இருந்தார்.
இவர்தான் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஜோதிட ரீதியில் சில ஆலோசனைகளை வழங்கியதாக சொல்லப்படுகிறது. அது போல் விஜய்யின் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் ஜோதிட ரீதியில் அவர்தான் கட்டமைத்தார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் ராதன் பண்டிட்டிற்கு அரசு பதவி வழங்கப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார். அதில் அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அடிப்படையில் ஒரு ஜோதிடர்.
அரசுச் செலவில் அதிகாரியாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும். "ஜோதிடம் தனை இகழ்" என்றார் பாரதியார். அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல!
இவர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பதும் ஏற்புடையதல்ல என விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பலரும் மக்கள் வரிப்பணத்தில் ஜோதிடருக்கு இத்தனை லட்சங்கள் ஊதியம் கொடுக்கப்பட வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
அது போல் விசிக ரவிக்குமார் தனது கண்டன ட்வீட்டில் மதச்சார்பற்ற அரசில் இது ஏற்கத்தக்கதல்ல. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். மேலும் விசிக வன்னியரசும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் தவெக அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்த போது பேசிய வன்னியரசு, மூடநம்பிக்கைகளை இந்த அரசு ஒழிக்க வேண்டும். ஜோதிடர்களை நம்பாதீர்கள்" என அறிவுறுத்தியிருந்தார்.

அது போல் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில் ராஜகுருவுக்கு அரசு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ராதன் பண்டிட் அரசு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை தமிழகத்தில் உள்ள அனைவரும் கண்டித்து வருகிறார்கள். உங்களுக்கு ஆஸ்தான குரு என்றால் பர்சனலாக வைத்துக் கொள்ளுங்கள் என பிரேமலதா பேசினார்.
இதையெல்லாம் கேட்ட முதல்வர் விஜய், நன்றி தெரிவித்து பேசும் போது ராதன் நியமனத்தை மறுபரிசீலனை செய்வோம் என தெரிவித்திருந்தார். அதன்படி ராதன் பண்டிட் நியமனம் வாபஸ் பெறப்பட்டுவிட்டது. விஜய் அரசு முதல் முறையாக ஒரு விஷயத்தை செய்து பின்வாங்கலை சந்தித்துள்ளது.












Click it and Unblock the Notifications