"பாஜகவின் ஊதுகுழல்" அரசின் மசோதாக்களை நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.. கொதிக்கும் வைகோ!
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜகவின் ஊதுகுழலாக செயல்படுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர் - மாநிக அரசு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அண்மையில் கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், டெல்லி, புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநருக்கு எதிராக மாநில அரசு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.
இதேபோல் தமிழ்நாட்டில் திமுக vs ஆளுநர் ஆர்என் ரவி இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. எந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்றாலும் சனாதனம், திராவிடம், திருக்குறள், திருவள்ளுவர், கலாச்சாரம், தமிழ், பண்பாடு உள்ளிட்டவை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வருகிறார்.

திமுக எடுத்த முடிவு
இதனால் ஆளுநர் ஆர்என் ரவியை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கண்டன அறிக்கை வெளியிட்டன. அதுமட்டுமல்லாமல் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களையும் ஆளுநர் ஆர்என் ரவி வேண்டுமென்றே கிடப்பதில் போட்டுள்ளதாக திமுக தரப்பில் குற்றச்சாட்டப்பட்டது. இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு செய்து உள்ளது.

டிஆர் பாலு அழைப்பு
ஆளுநரை திரும்பப்பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. திமுக மற்றும் தோழமைக் கட்சி எம்பிகளுக்கு அதன் பொருளாளர் எம்பி டி.ஆர்.பாலு கடிதம் எழுதி உள்ளார். அதில் நாளைக்குள் திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்து இந்த குறிப்பாணையில் கையெழுத்து போட வேண்டும். அதை குடியரசுத் தலைவரிடம் கொடுக்க உள்ளோம். ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

வைகோ பேட்டி
இதனை ஏற்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்ணா அறிவாலயம் வந்து குறிப்பாணையில் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வைகோ கூறுகையில், ஜனநாயகம், சமதர்மம், மதச்சார்பின்மை அடிப்படையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு உதவியாக ஆளுநர் பதவியில் இருப்பவர் செயல்பட வேண்டும்.

பாஜகவின் ஊதுகுழல்
ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இதற்கு விரோதமாக, நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைப்பதற்கு அதிகாரம் கிடையாது. தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை அனுப்பாமல் கிடப்பில் வைத்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பாஜகவின் ஊதுகுழல் போல் செயல்படுகிறார். எனவே இவர், தமிழக ஆளுநராக நீடிப்பதற்கு தகுதியற்றவராக உரிமையற்றவராக மாறியுள்ளார். இதனால் ஆளுநர் ஆர்என் ரவியை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாட்டின் 57 எம்பி-க்கள் கோரிக்கை மனு அனுப்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications