80% ரேட் கம்மி.. ஓடுங்க ஓடுங்க.. குறைந்த விலையில் பட்டாசுகள்.. அரசு அங்காடியின் தீபாவளி ஆஃபர்!
சென்னை: தீபாவளி பட்டாசுகளை MRP விலையில் இருந்து 80% வரை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையின் காமதேனு அங்காடி.
நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தற்போதே தமிழ்நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கின்றன. புத்தாடைகள் வாங்குவதற்கும், பட்டாசுகள் வாங்குவதற்கு பொதுமக்கள், குழந்தைகள் கடைகளில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் காமதேனு அங்காடியில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு விற்பனை செய்யப்பட்டுகிறது.

சென்னையில் 8 இடங்களில் இந்த சிறப்பு விற்பனை கடை அமைக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக மற்ற இடங்களில் விற்கப்படும் விலையை விட 25 சதவீதம் குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதால் மக்கள் ஆர்வத்துடன் இந்த காமதேனு அங்காடிகளை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். இதுகுறித்து பேசிய காமதேனு அதிகாரி, "டிவிசிஎஸ் காமதேனு சார்பில் இங்கு பட்டாசு கடை திறந்துள்ளோம். 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை வைத்து உள்ளோம். குறைந்த விலையில் பட்டாசுகளை வாங்கி தரமான முறையில் விற்பனை செய்து வருகிறோம்.
எங்கள் கூட்டுறவுத் துறையின் நோக்கம் இதுதான். அது மட்டும்ன்றி பட்டாசுகளை MRP விலையில் இருந்து 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம். மற்ற கடைகளை விட கண்டிப்பாக 20 சதவீதம் குறைவான விலையில் இங்கு பட்டாசுகள் கிடைக்கும். எங்கள் மேலாண் இயக்குநர் பாரம்பரிய பட்டாசுகளை தவிர நவீன பட்டாசுகளை கொள்முதல் செய்து கொடுத்து உள்ளார்கள். எனவே விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.

8 இடங்களில் நாங்கள் ஸ்டால் அமைத்து உள்ளோம். பொதுமக்கள் அனைவரும் இங்கு வந்து பட்டாசுகளை வாங்கி மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சென்னையில் அண்ணாசாலை காமதேனு சூப்பர் மார்க்கெட், ராஜா அண்ணாமலைபுரம், ராயப்பேட்டை, பெசண்ட் நகர், அடையாறு, திருவல்லிக்கேணி, சாலிகிராமம், பெரியார் நகர் ஆகிய 8 இடங்களில் எங்களின் ஸ்டால் உள்ளது. பொதுமக்கள் அனைவரும் சென்று பட்டாசு வாங்கி தீபாவளியை சிறப்பாக கொண்டாட வேண்டுகிறேன்.
ஆண்டுதோறும் இவ்வாறு நாங்கள் செய்து வருகிறோம். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக செய்துகொண்டு உள்ளோம். அது மட்டுமின்றி ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை விற்பனை செய்கிறோம். கடந்த சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் விற்பனை சிறப்பாக இருந்தது. இப்போதும் விற்பனை நடைபெற்று வருகிறது. குழந்தைகளுடன் வந்து பெரியவர்கள் பட்டாசு வாங்கிச் செல்கின்றனர். எங்கள் இடத்தில் வாகன நிறுத்தத்திற்கு போதிய வசதி உள்ளது. பொதுமக்கள் வந்து தாராளமாக வாங்கலாம்." என்றார்.












Click it and Unblock the Notifications