வடசென்னைக்கு ஒன்று! தென் சென்னைக்கு ஒன்று! மின்வெட்டு பிரச்னையே இருக்காது! தங்கம் தென்னரசு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாகத் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாகத் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதைக் குறிப்பிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து இன்று தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, டாஸ்மாக் முறைகேடு குறித்து விவாதிக்க வேண்டும் என்று அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அந்த அமளிக்கு நடுவே தான் அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே கொடுங்கையூர் மற்றும் தாம்பரம் பகுதிகளில் திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு மேலும் கூறுகையில், "சென்னை மாநகரத்தில் வாகனப் போக்குவரத்து பன்மடங்காக அதிகரித்துள்ளதால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காகப் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன அதன் ஒரு பகுதியாக வேளச்சேரி கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 7 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ. நீளத்திற்கு ஒரு மேம்பாலம் 310 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், அதேபோன்று இரயில்வே துறையுடன் இணைந்து கொருக்குப்பேட்டை இரயில்வே மேம்பாலம், சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும்.
குப்பையில் இருந்து மின்சாரம்
சென்னை பெருநகர மாநகராட்சியின் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் உயிரி எரிவாயு (Bio CNG) நிலையம் இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம் தானியங்கி பொருள் மீட்பு மையம் (Automatic Material Recovery Facility) மற்றும் 21 மெகாவாட் திறன் கொண்ட திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி 3450 கோடி ரூபாய் திட்டக் காலத்திற்கான மதிப்பீட்டில் தொடங்கப்படும்.
1500 டன் திடக்கழிவுகள்
இதைப் போன்று திறன்மிக்க திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின்சார உற்பத்தி செய்யும் பொருட்டு சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளுக்கு அருகிலுள்ள நகராட்சிகள் மற்றும் மின்சார உற்பத்தி செய்யும்பொருட்டு சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளுக்கு அருகிலுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்குப் பயன்படும் வகையில் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரம் மாநகராட்சிப் பகுதியில் நிறுவப்படும். இத்திட்டத்தின் கீழ் 1500 டன் மறுசுழற்சி செய்ய இயலாத திடக்கழிவின் செயலாக்கம் மூலம் தினந்தோறும் 15 முதல் 18 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இயலும்" என்றார்.
அடையாறு
மேலும் அடையாறு நதியை மீட்டெடுத்து அழகுறச் சீரமைக்கும் திட்டம் 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 30 மாத காலத்திற்குள் பணி நிறைவடையக் கூடிய இத்திட்டத்தின் முதற்கட்டமாக சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் வரையிலான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 15 மாதங்களுக்குள் இப்பணிகள் முடிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications