காவிரி நீரை தர மறுத்த கர்நாடகா அரசுக்கு தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டம் கண்டனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட மறுத்த கர்நாடகா அரசுக்கு தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக சட்டசபை கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் இந்த கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் மாண்பமை உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்தி உள்ளது.

காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக விவாதிக்க தமிழ்நாடு சட்டசபை கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு இன்று கூட்டியிருந்தது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடும் வகையில் நடைபெறும் இந்த அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள நீர்வளத்துறை அமைச்சர் அவர்களே, சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களே, தலைமைச் செயலாளர் அவர்களே, அரசுச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களே, உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

cauvery tamilnadu

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையினையும், மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினையும் பின்பற்ற மறுத்து, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையின்படி நமக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த அளவு தண்ணீரைக் கூட கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது.

இதனை முறியடித்து, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி பல ஆக்கபூர்வமான கருத்துகளை இங்கு நீங்கள் தெரிவித்து இருக்கின்றீர்கள். அதற்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ்நாட்டுக்கு சட்டபூர்வமாக உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கிடைக்க வேண்டிய நீரினைச் சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தை நாடித் தான் நீரைப் பெற்றோம்.

இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையிலும், கர்நாடகா அரசு இவ்வாறு நடந்து கொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

மேலும் இந்தக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் விவரம்:

- காவிரி நடுவர் மன்றம் 05-02-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், மாண்பமை உச்சநீதிமன்றம் 16-02-2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசிற்கு இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

- காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் மாண்பமை உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.

- காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் மாண்பமை உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாடு பெறவேண்டிய நீரை உடனடியாகப் பெறுவதற்கு, தேவைப்படின், மாண்பமை உச்சநீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இக்கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது. இவ்வாறு 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+