EMIS முதல் APPA வரை..12 அப்ளிகேசன்கள்! ஃபோன் மாதிரியே நாங்களும் ஹேங் ஆகுறோம்..புலம்பும் ஆசிரியர்கள்!
சென்னை: ஏற்கனவே அரசு பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர் காலிப் பணியிடங்கள் இருக்கும் நிலையில் கூடுதல் பணிச்சுமையால் தவிப்பதாக புலம்புகின்றனர் அரசு பள்ளி ஆசிரியர்கள். ஏற்கனவே எமிஸ், டிஎன்எஸ்சிடி, வருகை பதிவு, எஸ்எம்சி, இல்லம் தேடி கல்வி என பல அப்ளிகேஷன்கள் இருக்கும் நிலையில் கூடுதலாக அப்பா அப்ளிகேஷனை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாகவும். தங்களது செல்போன்களை போல தாங்களும் ஹேங்காகி இருப்பதாக கூறுகின்றனர் ஆசிரியர்கள்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகிறது. அரசு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என சுமார் 20 ஆயிரம் பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயில்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த காலங்களில் ஆஃப்லைனில் மாணவர்கள் கல்வி விவரங்கள் மற்றும் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது டிஜிட்டல் யுகம் என்பதால் மாணவர்களின் விவரங்கள் பெற்றோர்களின் விவரங்கள் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக பள்ளி கல்வித்துறை எமிஸ் எனும் இணையதளத்தையும் பராமரித்து வருகிறது. இந்த இணையதளத்தில் மாணவர்களின் விவரங்கள் மட்டுமல்லாது பெற்றோர்களின் விவரங்கள் கல்வித் தகுதி அரசின் நலத்திட்டங்கள் வருகை பதிவேடு உள்ளிட்டவையும் உடனுக்குடன் குறுஞ்செய்தியாக பெற்றோர்களுக்கு அனுப்பப்படுகிறது. ஒருவேளை மாணவன் பள்ளிக்கு வரவில்லை என்றால் அன்று மாலையே தங்கள் மகன் பள்ளிக்கு வரவில்லை.. காரணத்தை வகுப்பு ஆசிரியரிடம் தெரிவிக்கவும் என குறுஞ்செய்தி வரும்.
இந்த நிலையில் வருகை பதிவேடு மற்றும் அரசின் திட்டங்களை மாணவர்களின் பெற்றோருக்கு அனுப்ப பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக வாட்ஸப் தளம் ஒன்றையும் உருவாக்க இருக்கிறது. இந்நிலையில், 'APPA' ( Anaithu Palli Parent teachers Association) என்ற புதிய செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே 11 அப்ளிகேஷன்கள் இருக்கும்முறையில் கூடுதலாக ஒரு அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது என புலம்புகின்றனர் ஆசிரியர்கள்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்துமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி டிஎன்எஸ்இடி வருகைப்பதிவு அப்ளிகேஷனை டவுன்லோடு செய்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் டிஎன்எஸ்இடி ஸ்கூல், டிஎன்எஸ்இடி பேரண்ட்ன்ஸ், டிஎன்எஸ்இடி ஸ்டாப், எஸ்எம்சி வருகைப்பதிவு, எஸ்.எம்.சி உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி, மதிய உணவு, காலை உணவு, மணற்கேணி, டொபாக்கோ மானிட்டரிங் என 11 ஆப்கள் புழக்கத்தில் இருக்கிறது.
கூடுதலாக தற்போது 'அப்பா' அப்ளிகேஷனும் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும் என ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஏற்கனவே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கும் நிலையில் மார்ச் மாதத்தில் இருந்து மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என அரசு கூறுகிறது. மேலும் தற்போது தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இரண்டையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. தேர்வுகள் முடிந்தாலும் பேப்பர் திருத்த வேண்டிய பணி இருக்கிறது. அப்போதும் நாங்கள் மாணவர் சேர்க்கைக்காக வீடு வீடாக அலைய வேண்டி இருக்கிறது.
தற்போது 1 ஜிபி மெமரி கொண்ட டேப் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இடப் பிரச்சினையால் அதில் அப்ளிகேஷன்களை வைத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் சொந்த போனில் இந்த அப்ளிகேசன்களை டவுன்லோட் செய்துள்ளனர். இதனால் டேட்டா பிரச்சனையும் வருகிறது. ஏற்கனவே அரசு பள்ளிகளின் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும் நிலையில் கூடுதல் பணி சுமையால் தவிக்கிறோம். இப்போது டேட்டா கலெக்சன் பணியும் உள்ளதால் சமாளிக்க முடியவில்லை. எனவே அனைத்து அப்ளிகேஷன்களையும் ஒருங்கிணைத்து ஒரே அப்ளிகேஷனாக கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications