தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. 2 பேர் பலி.. சென்னை, கோவை, திருப்பூரில் வேகமெடுத்த வைரஸ்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன்படி இன்றும் கொரோனா பாதிப்பு 500யை கடந்த நிலையில் 2 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக சென்னை, கோவை, கன்னியாகுமரி, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும் எனவும், மேலும் மருத்துவமனைகளில் மாஸ்க் அணிய வேண்டும் வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதோடு கொரோனா பாதிப்பு என்பது மெல்ல மெல்ல உயர தொடங்குவதால் பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் தற்காப்பு நடவடிக்கையாக மாஸ்க் அணிதல், கைகளை சுத்தமாக கழுவுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்த விபரங்களை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று ஒரேநாளில் தமிழ்நாட்டில் கொரோனாவால் 542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 283 பேர் ஆண்களாகவும், 259 பேர் பெண்களாகவும் உள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் அதிகபட்ச பாதிப்பு என்பது சென்னையில் பதிவாகி உள்ளது. சென்னையில் மட்டும் இன்று 116 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக கோவையில் 75 பேரும், கன்னியாகுமரியில் 35 பேரும், திருப்பூரில் 28 பேரும், சேலத்தில் 27 பேரும், திருவள்ளூரில் 26 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாவட்டங்கள் உள்பட மொத்தம் 36 மாவட்டங்களில் பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இதன்மூலம் தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை என்பது 3,564 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த எண்ணிக்கை நேற்று 3,455 என்ற அளவில் இருந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். அதன்படி சென்னையில் ஒருவரும், காஞ்சிபுரத்தில் ஒருவரும் பலியாகி உள்ளனர். மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள சுகாதாரத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
***












Click it and Unblock the Notifications