ரெடியா இருக்கோம்.. தமிழ்நாட்டில் டெங்கு, சிக்கன்குனியா? சுகாதாரத்துறை அளித்த முக்கிய மெசேஜ் பாருங்க
சென்னை: தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட அனைத்து காய்ச்சல்களுக்கு தேவையான மருந்துகளும் போதிய அளவில் கையிருப்பு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், அந்த மாநிலத்தில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக தமிழக எல்லையோர மாவட்டங்களான கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வந்தது.

குடிநீர் விநியோகம்: எனவே, குடிநீரில் குளோரின் கலந்து வினியோகித்தல், ஏடிஸ் வகை லார்வாக்களை ஒழித்தல், டயர் உள்ளிட்ட தண்ணீர் தேங்கும் பொருள்களை அகற்றுதல், நிலவேம்பு குடிநீர் விநியோகித்தல் போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளையும் தமிழக அரசு முன்னெடுத்தது.
இந்நிலையில், தற்போது, தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவது அதிகரித்துள்ளது. அதனால், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.
இந்த வருடம் மட்டுமே இதுவரை 3,500-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 400 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது... இனி பருவமழை தீவிரமாகும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும், சிகிச்சைக்கான மருந்துகளை போதிய அளவில் இருப்பில் வைத்து கொள்ளுமாறும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சுகாதாரத்துறை: இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சொல்லும்போது, "பருவகால நோய்களுக்கு தேவையான மருந்துகள், மருத்துவ பொருட்கள் தமிழகத்தில் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள், மழைக்கால காய்ச்சல்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மாத்திரைகளும் ஏற்கனவே வாங்கப்பட்டுவிட்டன.
அதன்படி, டெங்குவுக்கு வழங்கப்படும் ஓசல்டாமிவிர் மாத்திரைகள் 2 லட்சத்துக்கும் அதிகமாக இருப்பில் உள்ளது. காய்ச்சலுக்கு வழங்கப்படும் பாராசிட்டமால் மாத்திரைகளும் தேவையான அளவு உள்ளன.
நம்பிக்கை: மேலும், தொண்டை அடைப்பான், ரண ஜன்னி, கக்குவான் இருமலுக்கான டிபிடி தடுப்பூசிகள், ஓஆர்எஸ் உப்பு சர்க்கரை கரைசல், கிருமி தொற்றுக்கான அசித்ரோமைசின் மாத்திரைகளும், அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான அளவு இருப்பில் உள்ளன. நீரில் உள்ள கிருமிகளை அழிப்பதற்கான குளோரின் மருந்தும் போதிய அளவில் உள்ளது" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications