மூளையை தின்னும் அமீபா மரணங்கள்.. ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுமா? தமிழக அரசு முக்கிய அலர்ட்
சென்னை: கேரளாவில் கடந்த சில வாரங்களில் மட்டுமே மூளையை தின்னும் அமீபா தொற்று காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டிலும் உயிரிழப்புகள் ஏற்படுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதற்கிடையே மக்கள் இதனால் பீதியடைய வேண்டாம் எனக் கூறியுள்ள தமிழக சுகாதார துறை இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா என்ற பாதிப்பு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. Naegleria fowleri என்ற இந்த அமீபா மூளையை அப்படியே மெல்ல தின்றுவிடும். ஏற்கனவே கேரளாவில் இதனால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கோழிக்கோடு தாமரச்சேரியை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி உயிரிழந்தார்.

கேரளாவை அலறவிடும் அமீபா
அதே கோழிக்கோடு மாவட்டத்தில் ஓமசேரியை சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்பவரின் 3 மாத குழந்தையும் இதே அமீபா நோய் பாதிப்பு காரணமாகப் பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக அந்தக் குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், சிகிச்சைப் பலனில்லாமல் அக்குழந்தை உயிரிழந்தது. மேலும், மலப்புரம் கப்பில் பகுதியைச் சேர்ந்த 52 வயதான ரம்லா என்பவரும் இதேபோல அமீபா தோற்றால் பாதிக்கப்பட்டார். கடந்த ஜூலை மாதம் முதலே இவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இவரும் உயிரிழந்தார்.
கேரளாவில் இதுபோல மூளையை தின்னும் அமீபா தொற்றால் உயிரிழப்புகள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் சூழலில், தமிழக சுகாதார துறை இது தொடர்பாகச் சில முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.
சுகாதார துறை உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் அமைந்துள்ள நீச்சல் குளங்கள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். பொதுவாக மாசடைந்த நீரில் தான் இந்த அமீபா தொற்று பரவும். இதனால் நீச்சல் குளங்களை முறையாகப் பராமரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
நீச்சல் குளங்களில் தினசரி இரு முறை தண்ணீரை வெளியேற்றி விட்டு குளோரின் பவுடர், தெளித்து சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இவை மாசடைந்த நீரிலேயே அதிகம் இருக்கும் என்பதால் அதுபோன்ற மாசுபட்ட நீர் நிலைகளுக்குக் குழந்தைகள் செல்வதைப் பெற்றோர்கள் தடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவாது
இந்த மூளைத் தின்னும் அமீபா தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவாது என்பதால் பொதுமக்கள் தேவையின்றிப் பீதி அடைய வேண்டாம். நீச்சல் குளங்களைத் தினசரி இரு முறை சுத்தப்படுத்த வேண்டும் என்ற இந்த உத்தரவை மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் நட்சத்திர ஹோட்டல்கள் நிர்வாகம் முறையாகப் பின்பற்றுகிறதா என்பதைச் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
மூளையை தின்னும் அமீபா என்றால் என்ன?
இந்த அமீபா அதிக மாசடைந்த நீர்நிலைகள், ஆறுகள் மற்றும் ஓடைகளில் தான் அதிகம் இருக்கும். இந்த நீரில் ஒருவர் நீச்சலடிக்கும்போது அவர்களின் மூக்கு வழியாக இவை உடம்பில் நுழைந்துவிடும். நாசி மூலம் இது மூளையை தாக்கிவிடும். இந்த அமீபா தொற்று ஏற்பட்டால் கிட்டத்தட்ட 97% பேர் உயிரிழந்துவிடுவார்கள். தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை இதன் பிரதான அறிகுறிகளாக உள்ளன.












Click it and Unblock the Notifications