மத்திய அரசு "விரும்பாவிட்டாலும்.." உண்மையை சொல்லனும்.. தமிழகத்தில் தடுப்பூசி காலி- மா.சு அதிரடி
சென்னை: தமிழகத்தில் சென்னையை தவிர்த்த பிற மாவட்டங்களில் சுத்தமாக கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் இன்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது- தடுப்பூசியை பொறுத்த அளவில் கடந்த இரண்டு நாட்களாக பற்றாக்குறை நிலவுவதை மத்திய அரசுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
அதேநேரம், மத்திய அரசின் சுகாதாரத்துறை மாநில அரசு சுகாதாரத் துறைக்கு தடுப்பூசி அளவை வெளியே சொல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

சொல்லாமல் இருக்க முடியாது
அப்படி சொல்லாமல் இருந்தால் மக்களுக்கு தெரியாமல் போய்விடும். மக்கள் வரிசையில் காத்திருந்து ஏமாந்து போகும் நிலைமை உருவாகும். எனவே உண்மை நிலையை சொல்வதுதான் சரியானது. அந்த வகையில்தான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருக்கிறோம். தமிழகத்தில் இதுவரை வந்துள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1 கோடியே ஒரு லட்சத்து 63 ஆயிரம். இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசிகளின் அளவு 97 லட்சத்து 62 ஆயிரத்து 957. கையிலிருப்பது வெறும் 1060 தடுப்பூசி மட்டும்தான். அதுவும் சென்னையில் மட்டு தான். மற்றைய 36 மாவட்டங்களில் சுத்தமாக தடுப்பூசிகள் இல்லை.

ஜூன் மாத தடுப்பூசி அளவு
ஜூன் மாதம் 37 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டுக்கு வரப் போவதாக மத்திய அரசு கூறியது. அதில் 6 .5 லட்சம் தடுப்பூசிகள் 13-ஆம் தேதிக்குள் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசிகள் வந்தால் அதனை மற்ற மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும்.

படுக்கைகள் காலி
முன்பை விட இப்போது கொரோனா பாதிப்பு பல மாவட்டங்களில் குறைந்து கொண்டு வருகிறது. பத்து நாட்களுக்கு முன்பு வரை மருத்துவமனையில் படுக்கை காலி இல்லாத நிலை இருந்தது. இப்போது 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக இருக்கின்றன. இவ்வாறு சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மத்திய அரசு கெடுபிடி
முன்னதாக மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டிருந்த ஒரு சுற்றறிக்கையில், தடுப்பூசிகள் தொடர்பான விவரம் மற்றும் அவை சேமித்து வைக்கப்பட்டுள்ள குளிர்பதன நிலைமை உள்ளிட்ட விவரங்களை மாநில அரசு வெளியே சொல்லக்கூடாது , மீடியாக்களுக்கு சொல்லக்கூடாது ஆன்லைனில் வெளியிடக்கூடாது என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. ஆனால் இந்த கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்துள்ளது தமிழகம் என்பது தமிழக சுகாதார துறை அமைச்சரின் பேட்டியிலிருந்து தெரிகிறது.

கருப்பு பூஞ்சை
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 1052 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மா சுப்பிரமணியன் தனது பேட்டியின்போது தெரிவித்தார். இது தொடர்பாக 35 ஆயிரம் குப்பிகள், தடுப்பு மருந்து கேட்டுள்ளதாகவும் 3060 குப்பைகள் மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications