தமிழ்நாட்டில் அடுக்குமாடி வீடுகளில் உள்ளோருக்கு மகிழ்ச்சி! விற்பனை பத்திரம் விடுங்க, நிலப்பட்டா ரெடி
சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பாக நடத்தப்படும் சிறப்பு முகாம்களில், வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்கள் விற்பனை பத்திரங்கள் மற்றும் இதர ஆவணங்களை ஒப்படைத்து பட்டா பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக வீட்டு வசதி வாரியம் சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், குறைந்த, நடுத்தர, உயர் வருவாய் என, பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு, வீடு, மனைகள் ஒதுக்கப்படுகின்றன.

மேலும், வீட்டுவசதி வாரியத்தின் மூலம், ஏராளமான திட்டங்களில் குறிப்பாக, பொதுமக்களுக்கு மாதத்தவணை திட்டம், மொத்த கொள்முதல் திட்டம், சுயநிதி திட்டம் போன்றவற்றின் அடிப்படையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.
வீடுகள் ஒதுக்கீடு: இப்படி வீடுகளை ஒதுக்கீடு பெற்றவர்கள், அதற்கான தொகையை தவணை முறையில் செலுத்த வேண்டும். இந்த நிலுவைத்தொகை செலுத்த வேண்டியவர்கள், உடனடியாக தொகையை செலுத்திவிட வேண்டும். அப்படி குடியிருப்புகளுக்குரிய முழுத்தொகையும் செலுத்திய பிறகு, கிரயப்பத்திரமும் உடனுக்குடன் வழங்கப்பட்டுவிடும்..
முழு பணத்தையும் செலுத்தியிருந்தும்கூட, விற்பனை பத்திரத்தை பெறாதவர்களும், நிலுவைத்தொகை உள்ளவர்களும், விரைவாக விற்பனை பத்திரம் பெறும்வகையில், செய்தித்தாள்களில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.. ஒருவேளை உரிய காலத்தில் தவணை தவறினால், வட்டிக்கு வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படுவது நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.. அதில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில், 1961-ம் ஆண்டில் இருந்து பொது மக்களின் நலன் கருதி மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி ஒதுக்கீடு செய்து வருகிறது. அவ்வாறு ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் முழுத் தொகையையும் செலுத்திய பிறகு நடைமுறையில் உள்ள வாரிய விதிமுறைகளின்படி விற்பனை பத்திரம் வழங்கி வருகிறது.
விற்பனை பத்திரம்: விற்பனை பத்திரம் பெற்ற ஒதுக்கீடுதாரர்களுக்கு தமிழக அரசின் மேலான உத்தரவிற்கு இணங்க முதற்கட்டமாக சென்னை மாவட்டத்தில் வருவாய் துறையிடமிருந்து நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு ஏதுவாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இதன் அடிப்படையில் வாரிய திட்டங்களில் ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டா பெற வருவாய் துறையுடன் இணைந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இச்சிறப்பு முகாம்களில் ஒதுக்கீடுதாரர்கள் பயன்பெற ஏதுவாக துண்டு சீட்டு பிரசுரம் செய்தல், வீடு வீடாக சென்று வசிப்பவர்களிடம் உரிய ஆவணங்கள் சேகரித்தல் மற்றும் அனைத்து ஒதுக்கீடுதாரர்களுக்கும் கடிதங்கள் அனுப்பி பட்டா பெற்று கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது.
பட்டா: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்கள் இச்சிறப்பு முன் முயற்சியை பயன்படுத்தி தாங்கள் வீட்டு வசதி வாரியத்திடமிருந்து வாங்கிய சொத்திற்கு நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு ஏதுவாக விற்பனை பத்திரங்கள் மற்றும் இதர ஆவணங்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பாக நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் ஒப்படைத்து பட்டா பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த அரிய வாய்ப்பின் மூலம் பயன் பெறுமாறு ஒதுக்கீடுதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications