விஸ்வகர்மா Vs கலைஞர் கைவினை திட்டம்..மரு வைத்த திமுகவின் கட்-காப்பி-பேஸ்ட் திட்டம்! அண்ணாமலை காட்டம்
சென்னை: மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள விஸ்வகர்மா திட்டம் குலத் தொழிலை ஊக்குவிப்பது போல் உள்ளதாகவும், அதனை அமல்படுத்த முடியாது என தமிழக அரசு கூறியது. இந்நிலையில் கலைஞர் கைவினைத் திட்டம் மூலம் பிணையில்லா கடன் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை காப்பி பேஸ்ட் திட்டம் என விமர்சித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மீம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
மண்பாண்டம், நகை, தச்சு தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்பவர்களுக்கு பிணையில்லாமல் கடன் வழங்கும் 'விஸ்வகர்மா' திட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்.

ஆனால் ஏற்கனவே தந்தை செய்த தொழிலை செய்பவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் எனவும், இது குலத் தொழிலை ஊக்குவிப்பது போல் இருக்கும் இத்திட்டம் சமூக நீதிக்கு எதிரானது என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும் இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த முடியாது எனவும், சமூக நீதி அடிப்படையில் கைவினைகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கான ஒரு விரிவான திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் குழு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் சார்பில் கலைஞர் கைவினை திட்டம் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிமுகப்படுத்தப்படும் என்பதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
இதன் மூலம், மூன்று லட்சம் ரூபாய் வரை பினையற்ற கடன் உதவி வழங்கப்படுகிறது. 50,000 வரை மானியமும், 5% வரை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. மேலும் திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. எந்த வகுப்பை சேர்ந்த 35 வயது நிரம்பியவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். கற்சிலை வடித்தல், உலோக வேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், துணி நெய்தல், துணிகளில் கலை வேலைப்பாடுகள் உள்ளிட்ட மேற்கண்ட தொழில்களுக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது.
எந்த வகுப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த தொழில் செய்பவர்களாக இருந்தாலு, தமிழக அரசின் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் 11.12.2024 முதல் வரவேற்கப்படும் நிலையில், https://www.msmeonline.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ அல்லது மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் திட்டத்தை திமுக அரசு காப்பியடித்துள்ளதாக தமிழக பாஜக விமர்சித்துள்ளது.

இதற்கிடையே தமிழக அரசின் கலைஞர் கைவினைத் திட்டத்தை காப்பி பேஸ்ட் திட்டம் என விமர்சித்துள்ளார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை. மேலும் இது தொடர்பாக மீம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தைச் செயல்படுத்துவதை தடுத்ததால் தமிழக மக்களின் வேதனையை எதிர்கொள்ள முடியாமல், திமுக அரசு விஸ்வகர்மா திட்டத்தின் கட்-காப்பி-பேஸ்ட் பதிப்பை அதன் ஸ்டிக்கர் ஒட்டி வெளியிட்டுள்ளது.
திமுக அரசால் தொடங்கப்பட்ட புதிய திட்டம் சில தகுதி தளர்வுகளுடன் வருகிறது. இது உள்ளூர் திமுக செயல்பாட்டாளர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது. விஸ்வகர்மா திட்டத்துக்காக தமிழகத்தைச் சேர்ந்த 8.4 லட்சம் உண்மையான விண்ணப்பதாரர்களுக்கு துரோகம் இழைத்ததன் மூலம், தி.மு.க. அரசு, அதன் ஸ்பின்-ஆஃப் பதிப்பின் மூலம், உள்ளூர் திமுக செயல்பாட்டாளர்களுக்கு 3 லட்சம் வரை பிணையில்லா கடன்களை வழங்கி, இலக்கு வைக்கப்பட்ட பயனாளிகளின் மானியங்களின் நோக்கத்தைப் பரப்புகிறது. முதல்வர் ஸ்டாலின் நோக்கம் இல்லாத அரசியல் அர்த்தமற்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications