தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: 28 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டில் முடிவுற்ற 19 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதோடு 28 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் கடந்த ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ.6,64,180 கோடி முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 29ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில் முன்னதாக இன்று சென்னையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு மாநாடு நடைபெறுகிறது. இன்று காலை மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர், ரூ.51 ஆயிரம் கோடி மதிப்பிலான 28 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இதனால், ஒரு லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இது குறித்து தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா கூறுகையில், "2021-ஆம் ஆண்டு முதல் இதுவரை தொழில் துறைக்காக பல்வேறு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், உலக முதலீட்டாளா் மாநாடுகளும் நடத்தப்பட்டன. மேலும், முதல்வா் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் வழியாகவும் முதலீடுகள் ஈா்க்கப்பட்டன.
இவையனைத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர குழு அமைத்து கண்காணித்தோம். இதனால் சாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அதன்படி, ஏற்கெனவே புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்ட நிறுவனங்களில் 19 நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கவுள்ளன. இதற்கான நிகழ்ச்சி முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
இந்த நிறுவனங்கள் ரூ.17,616 கோடி முதலீட்டில் தங்களது ஆலைகளைத் தொடங்கவுள்ளன. இதனால், 65 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதேபோன்று ரூ.51 ஆயிரம் கோடி மதிப்பிலான 28 புதிய திட்டங்களுக்கு இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளாா். இதனால், ஒரு லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்கும்" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications