படையெடுக்கும் மழை மேகங்கள்.. சென்னை மக்களே உஷார்! உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானாலும், தமிழ்நாட்டில் இன்று வறண்ட வானிலையை நிலவும்.
சென்னை: பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அதிகாலையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் ஓரிரு நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் இருப்பதும் லேசான தூறல் போடுவதுமாக வானிலை இருந்து வந்தது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறிய அறிவிப்பில் வரும் 27ம் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவித்திருக்கிறது.
இது குறித்த அறிவிப்பில், "இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஜனவரி 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் பரவலான பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இது தென்கிழக்கு வங்கக்கடலிலிருந்து மெல்ல மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது இன்று உருவானாலும் தமிழ்நாட்டில் இன்று வறண்ட வானிலைதான் நிலவும்.
நாளைய தினம் முதல்தான் மழை பொழிவு இருக்கும். குறிப்பாக கடலோர மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதேபோல மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த அளவில், இன்று முதல் பூமத்திய ரேகையையொட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டி உள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும் இடையிடையே சுமார் 55 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும். நாளை வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் இந்த சூறாவளி காற்று வீசும்.
இதே நாளை மறுநாள் இலங்கையையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40-45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த 27,28 மற்றும் 29 ஆகிய மூன்று நாட்களிலும் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்" என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையை பொறுத்த அளவில் பெரும்பாலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், 28ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications