மேய்ச்சல் நிலம்.. தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை எதிர்த்து விவசாய சங்கங்கள் இன்று ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழக அரசு கொண்டுவந்துள்ள நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கங்கள் சார்பில் இன்று நவம்பர் 19ம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
மாநிலத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த பெரிய திட்டங்களைச் சிறப்புத் திட்டமாக அறிவித்து, அதற்கான நிலங்களை ஒருங்கிணைக்கும் வகையில் "தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்புத் திட்டங்களுக்கு) சட்ட மசோதா" (TamilNadu Land Consolidation for Special Projects Act, 2023) கொண்டுவரப்படுவதாக, கடந்த வருடம் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள்: திமுகவின் கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், விவசாய சங்கங்கள் என பல்வேறு தரப்பினரும் இந்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான சட்ட விதிகளை வெளியிட்டிருக்கும் தமிழக அரசு, இந்தச் சட்டம் கடந்த அக்டோபர் 18-ம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டதாக அரசிதழிலும் வெளியிட்டிருந்தது.
இதற்கு விவசாய சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்றைய தினம் போராட்டத்தையும் அறிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாநிலப் பொதுச் செயலாளர்கள் சாமி.நடராஜன். பி.எஸ். மாசிலாமணி ஆகியோர் கடந்த வாரம் செய்திக்குறிப்பு ஒன்றையும் விடுத்திருந்தனர்.
விவசாயிகள்: அதில், "விவசாயிகளையும், விவசாயத்தையும், நீர்நிலைகளையும் அழித்தொழிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள நிலஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் வன்மையாக கண்டிப்பதோடு, இச்சட்டத்தை உடனே திரும்பப்பெற வலியுறுத்துகிறோம்.
கடந்த 21.4.2023 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதா முன்மொழியப்பட்டது. அம்மசோதா அறிமுகம் செய்யப்பட்ட அதே நாளில் எவ்வித விவாதமுமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆகஸ்ட் 23ல் ஒப்புதல் அளித்தார். இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென்று தமிழ்நாடு முழுவதும் இரண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்க அமைப்புகள் சார்பில் விவசாயிகளிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
தர்ணா போராட்டம்: அதன் பின்னர் 22.06.2023 அன்று சென்னையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் பெருந்திரள் தர்ணா போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து இச்சட்டத்திற்கு எதிராக விவசாயிகளும், பல்வேறு விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசு கடந்த ஓராண்டு காலமாக இச்சட்டத்தை கிடப்பில் போட்டிருந்தது.
தற்போது இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான சட்டவிதிகளை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திமுக கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில், அரசு திட்டங்களுக்காக நிலத்தை கையகப்படுத்தும்போது விவசாயிகள் ஒப்புதல் பெற்று செயல்படுத்தப்படும் என்று கூறியிருந்தது. அந்த வாக்குறுதிக்கு நேரெதிரானது இந்த சட்டம் என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.
இன்று ஆர்ப்பாட்டம்: இச்சூழ்நிலையில், தற்போது தமிழக அரசு கொண்டுவந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டத்தை உடனே திரும்பப்பெற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நவம்பர் 19ம் தேதி (இன்று) மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். எதிர்காலத்தில் விவசாயிகளையும், விவசாயத்தையும், நீர்நிலைகளையும் பாதுகாப்பதற்கு தற்போது கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டத்தை உடனடியாக தமிழ்நாடு அரசு திரும்பப் பெறுவதே விவசாயிகளுக்கு செய்யும் நன்மையாகும்" என்று தெரிவித்திருந்தது.
அதுமட்டுமல்ல, வேளாண் நிலம், மேய்ச்சல் நிலம், கால்நடைகளுக்கு நீர் ஆதாரமாக திகழும் நீர்நிலையை மட்டும் வைத்துவிட்டு, அதை சுற்றியுள்ள நிலங்களின் பயன்பாட்டை மாற்றுவது அந்த நீர்நிலையின் அழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.
சுற்றுச்சூழல்: ஆனால், தனியார் நிலங்களைக் கையகப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவது தீராத பிரச்சனையாக உள்ளது. எனவே, நிலம் கொடுத்த மக்களுக்கும் இழப்பீட்டுத்தொகை முறையாக, முழுமையாக செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இவைகளை கருத்தில்கொண்டுதான் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், மக்களையும், விவசாயிகளையும், சுற்றுச் சூழலையும் பாதிக்கும்படியான சட்ட திட்டங்களை அரசு கொண்டு வராது என்று திமுக தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications