மாதம் ரூ.1000.. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை! வீட்டுக்கே தேடி வரும் தமிழக அரசு.. வெளியான அப்டேட்!
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த விண்ணப்பத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. மகளிர் சமர்ப்பித்த விண்ணப்பங்களின் உண்மை தன்மையை கண்டறிய கள ஆய்வுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு நாளைக்கு ஒருவர் 100 விண்ணப்பங்கள் வரை பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசின் மிக முக்கியமான மகளிர் நலத்திட்டங்களை குறிப்பிடத்தக்கது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இந்த திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்படுகிறது.
இதற்கிடையே தகுதி இருந்தும் தங்களது விண்ணப்பங்கள் புறக்கணிக்கப்பட்டதாக ஏராளமான மகளிர் குறை சொல்லி வந்த நிலையில் அதனை தவிர்க்கும் பொருட்டு தற்போது தகுதி வாய்ந்த அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
மேலும் இதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மனுக்கள் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். 15ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களின் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. 45 நாட்களுக்குள் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மகளிர்க்கு உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பெரும்பாலானோருக்கு விண்ணப்பங்கள் வரப்பெற்றதாக குறுஞ்செய்தி வந்தது. ஆனால் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்ற தகவல் தெரியவில்லை.
தமிழக அரசு
இதனால் தங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா கிடைக்காதா என்ற கேள்வி குடும்ப தலைவிகளிடையே எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழக அரசு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு சமீபத்தில் வழங்கப்பட்ட புதிய விண்ணப்பங்களைப் பற்றி நேரடியாக கள ஆய்வு நடத்தத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ளவர்கள் உண்மையில் பணியாளர்களின் பரிசீலனைக்கு உட்பட்டவர்களா என்பதைக் கண்டறிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய விண்ணப்பங்கள்
இந்தக் கள ஆய்வில், ஒவ்வொரு விண்ணப்பத்தையும் அரசு அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்ய உள்ளனர். தமிழ்நாடு அரசு இதற்காக கள பணியாளர்களை நியமித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது, ஒரு நாளைக்கு 100 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. கள ஆய்வு முறையில், வட்டாட்சியர்கள் தங்கள் வட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நியாய விலைக்கடை விற்பனையாளர்களின் பகுதிகளுக்கேற்ப மனுக்கள் கள வாரியாக பிரித்து ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கள ஆய்வு
அலுவலர்கள் தினமும் குறைந்தது 100 விண்ணப்பங்களை கள ஆய்வு செய்து, அதற்கான செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், ஆய்வு அறிக்கையை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் தினசரி மாலை 6.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, விண்ணப்பங்களில் கொடுக்கப்பட்ட தகவல்கள் உண்மையா என்பதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் நடைபெறுகிறது.
கோப்பு பரிசீலனை
அதில் சொந்த வீடு, வாடகை வீடு, மொபைல் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்படும். மேலும், பெண் பயனாளிகளின் பொருளாதார வரம்பு, மகளிர் உரிமைத் தொகை விதிமுறைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கிறார்களா என்பதும் கவனத்தில் எடுக்கப்படும். இதில் விவரங்கள் சரியாக இருந்தால், அவர்களுக்கு ஜனவரி மாதத்தில் இருந்து மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications