Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 வருட திமுக ஆட்சியில்.. அரசியல் கொலை, போதைப் பொருள் புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். கொலைகள், கூலிப்படைத் தாக்குதல்கள், அரசியல் படுகொலைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், போதைப்பொருள் புழக்கம் மாணவர்களை சீரழித்து வருவதாகவும், மது மற்றும் போதைப்பொருள் கலாசாரத்தால் குடும்ப வன்முறைகள் உள்ளிட்ட குற்றங்கள் பெருகி வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

கொலைகள், கூலிப்படைத் தாக்குதல்கள்

தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளதாக தி.மு.க அரசு தொடர்ந்து கூறி வருகிறது. 2023-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2024-ம் ஆண்டில் கொலைகள் 7% குறைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், 2024-ல் கொலை வழக்குகள் 6.8% குறைந்ததாகவும், பழிவாங்கும் கொலைகள் 42% குறைந்ததாகவும் தெரிவித்தார்.

law and order crime dmk

இருப்பினும், எதிர்க்கட்சிகள் இந்த புள்ளிவிவரங்களை ஏற்க மறுக்கின்றன. கொலையின் எண்ணிக்கையில் வேண்டுமானால், கொஞ்சம், முன்னே பின்னே இருக்கலாமே தவிர, இந்த ஆட்சி காலத்தில்தான், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உயிர் பயத்தோடு சுற்றுகிறார்கள் என்பதை அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

அரசியல் தலைவர்கள் படுகொலை

திமுக கூட்டணியில் உள்ளது காங்கிரஸ். அந்த கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவரான கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங், மே 2, 2024 அன்று திடீரென காணாமல் போனார். இந்த நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு, மே 4 ஆம் தேதி, திசையன்விளை அருகே கரைச்சுத்துப்புதூரில் உள்ள அவரது விவசாயத் தோட்டத்தில் உடல் கருகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது கை கால்கள் மின்சாரக் கம்பிகளால் கட்டப்பட்டிருந்த கொடூரமான நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. ஜெயக்குமார் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஏப்ரல் 30 அன்று, தனக்கு சில காங்கிரஸ் பிரமுகர்கள் உட்பட எட்டு நபர்களால் கொலை மிரட்டல் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார் என்பது இந்த வழக்கில் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகார் கொடுத்தும் காவல்துறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அம்பலமானது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் (பி.எஸ்.பி) தமிழக மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (வயது 47) 2024ம் ஆண்டு, ஜூலை 5 அன்று மாலை, சென்னை பெரம்பூர் அருகே செம்பியம் பகுதியில் உள்ள அவரது கட்டப்பட்டு வரும் வீட்டின் முன்பு கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். ஆறு பேர் கொண்ட கும்பல் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்து, கொடூரமான ஆயுதங்களால் ஆம்ஸ்ட்ராங்கைத் தாக்கியது . 2023 இல் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் என்பவரின் மரணத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை நடந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், பழிவாங்குதல், பழைய விரோதங்கள், ரியல் எஸ்டேட் தகராறுகள் மற்றும் ஜாதிய மோதலுடன் கலந்த தொழில் போட்டி என பல்வேறு கோணங்களில் காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இவ்வளவு காரணங்களை இப்போது தோண்டியெடுத்த காவல்துறை மற்றும் உளவுத்துறை, இந்த கொலைக்கு முன்பாக ஏன் இதை கண்டறிய முடியவில்லை, ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஏன் பாதுகாப்பு தரவில்லை அல்லது எச்சரிக்கையாவது தரவில்லை என்ற கேள்விகள் பெரும்பாலான கட்சித் தலைவர்களால் முன்வைக்கப்பட்டது. இதுவரை விடையில்லை.

law and order crime dmk

கருப்பு தினம்

ஜூலை 28, 2024 அன்று, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு கருப்பு தினமாக, 24 மணி நேரத்திற்குள் வெவ்வேறு முக்கிய கட்சிகளைச் சேர்ந்த 2 அரசியல் பிரமுகர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அ.தி.மு.க வார்டு செயலாளர் பத்மநாபன், கடலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வெட்டிக் கொல்லப்பட்டார் . பா.ஜ.க சிவகங்கை கூட்டுறவுப் பிரிவு செயலாளர் செல்வகுமாரும் அன்றைய தினம் தப்பவில்லை. பைக்கில் சென்றபோது நடு ரோட்டில் அச்சமேயின்றி கொலையாளிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

விஏஓ கொடூர கொலை

சட்டவிரோத மணல் குவாரிகள் குறித்து புகார் அளித்ததற்காக, 2023ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ) பணியாற்றி வந்த லூர்துசாமி, அவரது அலுவலகத்திலேயே கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார் . இந்த சம்பவம், அரசு அதிகாரிகளையே அச்சத்தில் உறைய வைக்கும் அளவுக்கான கொடூரமாக இருந்தது.

சமூக ஆர்வலர்கள் பரிதாப நிலை

* மே 4, 2024 அன்று, திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், முறைகேடுகளை அம்பலப்படுத்தி வந்தவருமான டி. பெர்டின் ராயன் (36) ஆயுதங்களால் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது . இவர், திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் நடக்கும் சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் சட்டவிரோத கல் குவாரிகளுக்கு எதிராக தொடர்ந்து மனுக்கள் அளித்து வந்த நிலையில் இந்தத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார் .

* கனிமவளக் கொள்ளை தடுக்கப்படாவிட்டால், மக்களைத் திரட்டி போராடப் போவதாக பேட்டி கொடுத்த அதிமுக ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், புதுக்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி, 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் லாரி மோதியதில் பலியானார். இவர் கொலை செய்யப்பட்டதாக பல தரப்பினரும் குற்றம்சாட்டிய நிலையில், சிலர் கைது செய்யப்பட்டனர்.

law and order crime dmk

* இன்னொரு கொடுமை என்னவென்றால், முன்னாள் முதல்வர் கருணாநிதியில் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஜாஹீர் உசேன் நடு ரோட்டில் கொலை செய்யப்பட்டதுதான். 2025, மார்ச் மாதம் இந்த படுகொலை அரங்கேறியது. தர்காவுக்கு தொழுகை நடத்தச் சென்று விட்டு நடந்து வீட்டுக்கு போனபோது ஒரு கும்பலால் பயமேயின்றி கொலை செய்யப்பட்டார். வக்பு சொத்துக்களை காக்க எவ்வளவோமுறை புகார் கொடுத்தவர் இவர், மேலும் தன்னை கொலை செய்துவிடுவார்கள் என்று வீடியோவும் வெளியிட்டவர் இவர். ஆனாலும், ஸ்டாலின் தலைமையிலான அரசின், தமிழக காவல்துறை அதைபற்றி சீரியஸ் நடவடிக்கை எடுக்கவில்லை.

போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு

தமிழக காவல்துறையினருக்கு போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. போதைப்பொருள் புழக்கமும், சைபர் குற்றங்களும் மாநிலத்தில் அதிகரித்து வருவதாக காவல்துறையின் புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன. கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்களின் ஆபத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளன. இந்த சம்பவம் சட்டசபையிலும் பெரும் விவாதப் பொருளானது.

தமிழக காவல்துறையின் அமலாக்கப் பிரிவு (Enforcement Bureau CID) புள்ளிவிவரங்களின்படி, போதைப்பொருள் பயன்பாட்டிற்காக மருந்து மாத்திரைகளை பயன்படுத்தியதாக, பறிமுதல் செய்வது 2024 ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 39,910 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1.42 லட்சமாக உயர்ந்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் 24,215 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

law and order crime dmk

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2021-ம் ஆண்டில், அதாவது திமுக ஆட்சிக்கு வந்த முதல் வருடத்தில், அதற்கு, முந்தைய ஆண்டை விட 16% அதிகரித்துள்ளதாக காவல்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2020-ல் 404 ஆக இருந்த பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2021-ல் 442 ஆக உயர்ந்தன.

தமிழகத்தில் பெண்களுக்கெதிரான குற்றங்களின் எண்ணிக்கை 2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து 33.5% உயர்ந்துள்ளதாக காவல்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் வெளிவந்துள்ளது.

அதிலும் 2023 உடன் ஒப்பிடும்போது ஒரே ஆண்டில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் 16% உயர்ந்துள்ளதும், குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் 52% உயர்ந்திருக்கிறது.

கணவர் மற்றும் குடும்பத்தினரால் ஏற்படும் குடும்ப வன்முறை கொடுமைகள் 21.2% அதிகரித்துள்ளன. சிறார்களை துன்புறுத்துவோருக்கு எதிராக பதியப்படுவது போக்சோ சட்டம். அதன் கீழ் பதியப்பட்ட வழக்குகள் 2020-ல் 3,090 ஆக இருந்தது, 2021-ல் 4,469 ஆக அதிகரித்துள்ளது. சிறுவர், சிறுமிகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை கூடிவிட்டது என்பதை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

law and order crime dmk

போதை மருந்து பயன்பாடு அதிகரிப்புக்கும் கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்புக்கும் நேரடி தொடர்பு இருக்கும் என்பதை விளக்கிதான் புரிய வேண்டும் என்ற அவசியமில்லை. ஆம்.. கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவையுமில்லை.

2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக, "புதிய விடியலை" உருவாக்கும் நோக்கில், "குற்றங்கள் இல்லாத, பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யும் மாநிலம்" உருவாக்கப்படும் என ஸ்டாலின் ஒரு தொலைநோக்கு ஆவணத்தை வெளியிடுவதாக உறுதியளித்தார்.

2022ம் ஆண்டு, நடைபெற்ற கலெக்டர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், சமூக விரோத சக்திகள் மற்றும் கூலிப்படையினர் சட்டம் ஒழுங்கையும், பொது அமைதியையும் சீர்குலைத்தால் அவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தவர்தான் ஸ்டாலின். ஆனால், அதற்கு பிறகுதான் நாம் மேலே குறிப்பிட்ட பல குற்றச்செயல்கள் அரங்கியுள்ளன. எங்கே போனது இரும்புக் கரம் என்ற கேள்வி ஸ்டாலினை நோக்கி எதிரொலித்தபடியே உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+