மருத்துவமனைகள் மொத்தமா மாறுது.. கொல்கத்தா கொடூர சம்பவத்தை தொடர்ந்து பறந்தது அதிரடி உத்தரவு!
சென்னை: மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து தமிழக மருத்துவத்துறை மருத்துவமனையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மருத்துவமனைகளில் கண்டிப்பாக ஒரு காவல்துறை மையம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலப் பணி இயக்குநர் ராஜமூர்த்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பயிற்சி மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பயிற்சி மருத்துவருக்கு ஏற்பட்ட கொடூரத்தைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். இந்தச் சூழலில் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மருத்துவமனைகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் தமிழ்நாட்டில் மருத்துவத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, புதிய நடைமுறைகள் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனைகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடைமுறைகளை செயல்படுத்துமாறு தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலப் பணி இயக்குநர் ராஜமூர்த்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மருத்துவமனைகளில் கட்டாயம் ஒரு காவல்துறை மையம் அமைக்க வேண்டும். மருத்துவமனைகளின் பணியாளர்களின் பாதுகாப்புக்காக ஆலோசனை மற்றும் பாதுகாப்பு என இரண்டு கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும். மருத்துவமனை வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
மருத்துவமனையில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். பார்வையாளர்களுக்கு அடையாள அட்டை கொடுக்க வேண்டும். மருத்துவமனையில் இரவு நேர பாதுகாப்பு உறுதி செய்ய மருத்துவமனை வளாகத்தைச் சுற்றி மின்விளக்குகள் அமைக்க வேண்டும்
மருத்துவ பணியாளர்களை தாக்கினால் மருத்துவ பணியாளர்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பதாகையை மருத்துவமனைகளில் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நெறிமுறைகள் அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய உத்தரவை உடனடியாக அமல்படுத்த இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அதிகாரி வருவாய் நிர்வாக அதிகாரிகளுக்கும் தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குநர் ஜெய ராஜமூர்த்தி சுற்றறிக்கை வாயிலாக தெரியப்படுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications