மேட்டூர் மட்டுமல்ல எந்த அணையையும் தூர்வார முடியாது! ஒரே பேச்சில் முடித்து வைத்த அமைச்சர் துரைமுருகன்
சென்னை: சுமார் 90 ஆண்டுகளுக்கு பிறகாக மேட்டூர் அணை முதன் முறையாக தூர்வாரப்பட இருப்பதாகவும், சோதனை அடிப்படையில் 1.40 லட்சம் யூனிட் வண்டல் மண்ணை தூர்வார தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மேட்டூர் அணை மட்டுமல்ல எந்த அணையையும் தூர்வார முடியாது எனக் கூறியிருக்கிறார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீரை மறித்து சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பாக மேட்டூர் அணை கட்டப்பட்டது. தமிழகத்தின் நீர் ஆதாரங்களில் மிக முக்கியமான அணையாக மேட்டூர் அணை இருக்கிறது.

இங்கிருந்து காவிரி பிரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. 1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மேட்டூர் அணையின் கட்டுமான பணிகள் 1934 ஆம் ஆண்டு முடிவடைந்தது. இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் நீர் பாசன வசதி பெறுகின்றன.
சுமார் 120 அடி உயரமும் 1700 மீட்டர் நீளமும் கொண்ட இந்த அணையில் சுமார் 93 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இது கர்நாடகாவில் உள்ள மிகப் பெரிய அணையான கிருஷ்ணராஜர் சாகர் அணையை விட இரண்டு மடங்கு பெரிய அணை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அணை மக்கள் பயன்பாட்டுக்கு வந்து கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளை இன்னும் சில ஆண்டுகளில் எட்ட இருக்கும் நிலையில், மேட்டூர் அணை இதுவரை தூர்வாரப்படவில்லை.
அணையில் சுமார் 30 சதவீதம் வண்டல் மண் மட்டுமே தேங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மேட்டூர் அணையை தூர்வார வேண்டும் என பல ஆண்டுகளாகவே சேலம் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் மேட்டூர் அணையின் ஒரு பகுதியில் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியானது.
முதற்கட்டமாக சுமார் 1.40 லட்சம் யூனிட் வரை வண்டல் மண் தூர்வாரப்பட இருப்பதாகவும், இதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற ஆலோசகர்களை நியமனம் செய்ய தமிழக அரசின் நீர்வளத்துறை ஏலம் கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அனுமதி கிடைத்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனால் கூடுதலாக 30 டி எம் சி தண்ணீர் சேமிக்க முடியும் என்பதால் அணையை தூர்வாரும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் மேட்டூர் அணை மட்டுமல்ல எந்த அணையையும் தூர்வார முடியாது எனக் கூறியிருக்கிறார் தமிழக நீர்வளத்துறை அமைச்சரான துரைமுருகன். வேலூர் மாவட்டத்தில் நான்காவது துணை கண்காணிப்பு அலுவலகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," அணைக் கட்டுகளை எங்கும் தூர்வாரவே முடியாது. எந்த நாட்டில் அணைகளை தூர்வாரி இருக்கிறார்கள். மேட்டூர் அணையோ அல்லது எந்த அணையாக இருந்தாலும் அனைத்து கீழே மணல் வருவதற்கு சரியான இடம் இருக்கும். அது வழியாக மணல் அடித்து வரப்பட்டு ஆற்றில் சேர்ந்து வரும். தற்போது ஆற்று மணலைத் தான் எடுத்து வருகிறோம். அணையை யாரும் தூர்வார மாட்டார்கள்" என கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications