பழைய ஓய்வூதிய திட்டம்+ இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை! நாளை ஸ்டாலின் குட் நியூஸ்? ஜாக்டோ ஜியோ தகவல்
சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரிப் போராட்டம் அறிவித்துள்ள அரசு ஊழியர், ஆசிரியர் சங்கக் கூட்டமைப்புகளுடன் தமிழக அமைச்சர்கள் குழு இன்று காலை 11.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நாளை முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார் என ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.
ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு, பழைய, பங்களிப்பு, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டங்கள் குறித்த அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. எனினும் பரிந்துரைகள் வெளியிடப்படவில்லை.

அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அடங்கிய குழு, அறிக்கை குறித்து விவாதித்தது. முதல்வருடன் ஆலோசித்தபின்பு, ஓய்வூதியம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக, ஜாக்டோ-ஜியோ, போட்டோ-ஜியோ கூட்டமைப்புகள் டிசம்பர் 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. கடந்த டிசம்பர் 22ஆம் தேதி அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் என கூட்டமைப்புகள் உறுதியாகத் தெரிவித்தன.
தமிழக அரசு எடுத்துள்ள ஓய்வூதிய முடிவை, போராட்டம் அறிவித்த கூட்டமைப்புகளுக்குத் தெரிவிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில், அமைச்சர்கள் குழு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் பேச்சுவார்த்தை முடிந்தது. முதலில் போட்டோ ஜியோ (FOTO JEO) அமைப்புடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஜாக்டோ ஜியோவுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பேச்சுவார்த்தையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் கூறுகையில், பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நாளை முதல்வர் ஸ்டாலின் நல்லதொரு அறிவிப்பை வெளியிடுவார். எங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. ஏற்கெனவே அமைச்சர்களுடன் 4 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். முதல்வரின் அறிவிப்புக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம். இந்த கோரிக்கைக்காக 22 ஆண்டுகள் நாங்கள் காத்திருந்தோம்.
மேலும் எங்களது மீதமுள்ள கோரிக்கை குறித்தும் அமைச்சர்களிடம் தெரிவித்தோம். அவர்கள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். அது போல் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது கோரிக்கை குறித்தும் நாங்கள் பேசியுள்ளோம். அது குறித்தும் நல்ல முடிவு எடுப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். எனவே எங்களுக்கு நாளை புத்தாண்டு பரிசு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications