ஆம்ஸ்ட்ராங் கொலை.. தொடர்புடைய ரூ.150 கோடி நிலம் சென்னை புறநகரில் மீட்பு! அதிகாரிகள் நடவடிக்கை
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வழக்கு விசாரணையில் தொடர்ச்சியாகப் பல திடுக் தகவல்கள் வெளியாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க ஆம்ஸ்ட்ராங் கொலைக்குக் காரணமாக இருந்ததாகச் சொல்லப்படும் ரூ. 150 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை இப்போது தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னையில் அவரது இல்லத்தின் அருகே வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது நாடு முழுக்க பேசுபொருளானது.

நடவடிக்கை: ஆம்ஸ்ட்ராங்கை கொலையில் கொலையில் தொடர்பு இருக்கும் அனைவரது மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். போலீசஸ் விசாரணையில் தொடர்ச்சியாகப் பல திடுக் தகவல்கள் வெளியானது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் வரிசையாகக் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் 20க்கும் மேற்பட்டவர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும், திருவெங்கடம் என்பவர் போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்ற போது என்கவுண்டர் செய்யப்பட்டார்
நிலம் மீட்பு: இந்த வழக்கை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த கொலைக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அதன்படி நிலத்தகராறு காரணமாகவும் இந்த கொலை நடந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.. அதாவது ஆம்ஸ்ட்ராங் மற்றும் நாகேந்திரன் இடையே நிலத்தகராறு விஷயத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாகக் கொலை நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதேநேரம் போலீஸ் தரப்பு இதற்காகத் தான் கொலை நடந்தது என்பதை உறுதி செய்யவில்லை.
ரூ. 150 கோடி: இதற்கிடையே 150 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த ஆக்கிரமிப்பு நிலத்தை இப்போது தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மீட்டுள்ளனர். பொன்னேரி அடுத்துள்ள ஒரக்காடு கிராமத்தில் பிரபல சோப் நிறுவனம் இந்த ரூ.150 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறது. அந்த 14.5 ஏக்கர் நிலத்தைத் தான் இப்போது பொன்னேரி வட்டாட்சியர் மீட்டுள்ளார்.
இந்த நிலம் போலி பட்டா மூலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஆக்கிரமிப்பை மீட்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கினர். இருப்பினும், நீதிமன்ற வழக்கால் அது தடைப்பட்டது. இந்தச் சூழலில் இப்போது அந்த நிலம் மீட்கப்பட்டுள்ளது.
பின்னணி என்ன: திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்துள்ள ஒரக்காடு கிராமத்தில் பிரபல சோப்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாகவே அரசுக்குச் சொந்தமான 14.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து அங்கே தொழிற்சாலைகளை அமைத்து சோப்பு தயாரிக்கும் பணிகளைச் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அரசுக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக பொன்னேரி வட்டாட்சியரிடம் மனுவும் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு நிலத்தை அதிகாரிகள் அளவீடு செய்து பார்த்தனர். அதில் சோப்பு நிறுவனம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கிய போது நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். இதனால் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
மீட்பு: இப்போது சட்டச் சிக்கல்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், 150 கோடி மதிப்பிலான 14.5 ஏக்கர் அரசு நிலத்தை இப்போது அதிகாரிகள் மீட்டுள்ளனர். பொன்னேரி வட்டாட்சியர் தலைமையில் உள்ளே அதிகாரிகள் அங்கிருந்த கட்டிடங்களை நான்கு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றி நிலத்தை மீட்டனர்.












Click it and Unblock the Notifications