ஜெய் ஶ்ரீ ராம் கோஷம் போட்டால் 'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கம்! ஆளுநர் ரவிக்கு குவியும் கண்டனங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "மதுரையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று மூன்று முறை இந்துத்துவா வெறியர் போல மாணவர்களை கூச்சலிட வைத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது; அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார். அதேபோல, ஜெய் ஶ்ரீராம் என முழக்கமிட்டால் இனி தமிழ்நாடு தமிழருக்கே என எதிர் முழக்கமிடுவோம் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக தி.க. தலைவர் கி.வீரமணி கூறியிருப்பதாவது: மதுரையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற #ஆளுநர் ஆர்.என்.ரவி, தான் பேசி முடித்ததும், 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று மூன்று முறை கூச்சலிட்டதுடன், மாணவர்களையும் திரும்பச் சொல்லச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்.

rn ravi tamilnadu

கடைநிலை இந்துத்துவா வெறியர்

இந்திய அரசமைப்புச் சட்டப்படியான பொறுப்பில் உள்ள ஒருவர், அந்த அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறான #மதச்சார்பின்மைக்கு எதிராகத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறார்; அதிகார வரம்பை மீறிச் செயல்படுகிறார்; ஆற்ற வேண்டிய கடமையைக் காலத்தே ஆற்றத் தவறுகிறார்; மாணவர்களிடம் மதவெறியைத் தூண்ட முயலும் கடைநிலை இந்துத்துவ வெறியராகவே வலம் வருகிறார். உச்சநீதிமன்றத்திடமிருந்து குட்டு வாங்கிய பிறகும், தன் போக்கை மாற்றிக் கொள்ளாமல், ஆர்.எஸ்.எஸ். கொள்கை அடிப்படையிலான தன் சொந்த விருப்பு வெறுப்புகளை ஆளுநர் என்ற பதவியைப் பயன்படுத்திச் செயல்படுத்திக் கொண்டிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.

ஆளுநரை உள்ளே அனுமதித்தது யார்?

மாணவர்களிடம் மதவெறியைத் தூண்டுவதையும், சமூகநீதிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதையும் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அனுமதிக்கவே கூடாது. கல்வித் துறைக்கும் இவருக்கும் தொடர்பில்லை என்ற நிலை உச்சநீதிமன்றத்தாலேயே உறுதி செய்யப்பட்டுவிட்ட பிறகும், இவரை அழைத்து நிகழ்ச்சி நடத்துவோர் யார் என மக்கள் அடையாளம் காணவேண்டும்.

உடனே டிஸ்மிஸ் செய்யுங்க

இத்தகைய மதவெறியர் ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும். இல்லையேல், தமிழ்நாட்டு மாணவர்களும், பொதுமக்களும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடும் நிலையைத் தவிர்க்க முடியாது என்பதை எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு கி.வீரமணி கூறினார்.

ஆளுநருக்கு விசிக கடும் கண்டனம்

விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு: மதுரை தனியார் கல்லூரி ஒன்றில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ரவி, ஜெய்ஶ்ரீராம் முழக்கத்தை எழுப்பியதோடு, மாணவர்களையும் திரும்ப சொல்ல வைத்தது கடும் கண்டத்துக்குரியதாகும்.

ஆளுநருக்கு மனநிலை பாதித்துவிட்டது

மதச்சார்பின்மை மீது கட்டமைக்கப்பட்ட அரசியலமைப்புச்சட்டத்தை அவமதிக்கும் போக்கை துணிந்து எடுத்துள்ளார் ஆளுநர் ரவி. கடந்த 10.4.2025 அன்று தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு எதிராக தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஆளுனர் கடுமையாக கண்டனத்துக்குள்ளாக்கப்பட்டார். அதனால்,மன நலம் பாதிக்கப்பட்டு ஜெய்ஶ்ரீராம் என முழங்கியிருக்கலாம். இச்சூழலில், அரசியலமைப்புச்சட்டத்தை பாதுகாக்க வேண்டுமானால் ஆளுநர் பதவியிலிருந்து ஆர்.என். ரவியை நீக்கம் செய்ய வேண்டும். பல்வேறு சமயத்தினர் படிக்கின்ற கல்லூரி மாணவர்களிடையே சனாதனத்தையும், மதவாதத்தையும் பரப்புவது அநாகரீகம் மட்டுமல்ல; மதவெறியின் உச்சமாகும். ஆகவே ஆர்.என்.ரவி அவர்களை, ராஜ்பவன் மாளிகையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

ஆளுநரே திரும்பிப் போ- மனோ தங்கராஜ்

திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ்: இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தினை கால் தூசு அளவிற்கு கூட ஆளுநர் மதிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்-ன் Bunch of Thoughts எனும் நஞ்சை மனதில் சுமந்து நடக்கும் ஆளுநர் எப்படி அரசியல் சட்டத்தை மதிப்பார்?

பல மத நம்பிக்கைகள் உடைய கல்லூரி மாணவர்கள் மத்தியில் அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட மதத்தை திணிக்கும் நோக்கில் தனது அதிகாரத்தை தவறாகக் கையாண்டிருக்கிறார். இப்பேர்பட்ட நஞ்சை சுமக்கும் நாகரீகமற்றவர்கள் எப்படி நடுநிலையுடன் மக்களுக்கு சேவை ஆற்ற முடியும். உச்சநீதிமன்ற தீர்ப்பால் விரக்தியில் இருக்கம் ஆளுநரே திரும்ப போ.

இனி தமிழ்நாடு தமிழருக்கே முழக்கம்தான்!

மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி: 'ஜெய்ஸ்ரீராம்' என கூப்பாடு போட்டால் 'தமிழ்நாடு தமிழருக்கே!' என எதிர்முழக்கமிடுவோம்.


இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் முகவராக இந்திய குடியரசுத் தலைவரால் மாநிலங்களில் நியமிக்கப்படும் ஆளுநர்கள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டவர்கள்.இனமொழி மத வேறுபாடு இன்றி அனைத்து மக்களுக்கும் பொதுவானவர்.இந்த அடிப்படையை புரிந்து கொண்டு தம் கடமையை உணர்ந்து சிறந்த முறையில் விடுதலை பெற்ற காலம் தொட்டு இந்த நாட்டின் மாநிலங்களின் ஆளுநர்கள் கடமையாற்றி வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநர் ரவி அவர்கள் இந்திய அரசியல் சாசனத்தின்படி கடமை ஆற்ற வேண்டிய பொறுப்பினை மறந்து ஆர். எஸ்.எஸ். தலைமை பீடமான நாக்பூருக்கு மட்டுமே தான் கடமைப்பட்டவர் என்பது போல் செயல்படுவது வேதனைக்குரியது.எப்போதுமே சர்ச்சைகளில் அடிபடுபவராக மாநில மக்களின் நலனுக்கு எதிராக மாநில அரசின் நற்பணிகளுக்கு நல்ல நோக்கங்களுக்கு முரணாக தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் விதமாக தனது பணிகளை அமைத்துக் கொண்டு வருகிறார்.

இந்தியாவின் உச்சநீதிமன்றம் பலமுறை குட்டு வைத்த பிறகும் கூட தனது போக்கை மாற்றிக் கொள்ளாததோடு ஒரு கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ். ஊழியர் போன்று செயல்படுகிறார்.மதுரை தியாகராயர் கல்லூரியில் மாணவர்கள் நடுவே உரையாற்றிய ஆளுநர் இந்த இடத்திற்கு சற்றும் பொருத்தம் இல்லாத ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கத்தை மாணவர்களை நோக்கி முழங்கிட வற்புறுத்தி உள்ளார்.இந்த முழக்கத்தை எழுப்பித்தான் இந்த நாட்டில் மக்கள் மதவெறி அமைப்புகளால் பிளவுபடுத்தப்பட்டார்கள்.வழிபாட்டுத்தலங்கள் தகர்க்கப்பட்டன.சின்னஞ்சிறு மழலை ஆசிபா வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டாள்.பசு குண்டர்கள் அப்பாவிகளை கொலை செய்தார்கள்.

கல்வி அறிவு புகட்ட வேண்டிய மாணவர்கள் நடுவே ஆர்.எஸ்.எஸ். ன் கோஷம் போடுவதும் போடத் தூண்டுவதும் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் ஒரு பொறுப்பானவருக்கு அழகு அல்ல.ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ். அலுவலகமாக மாற்ற அவருக்கு உரிமை இல்லை. இதற்கு அவர் பொதுமக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும்.

தமிழ் மாணவர் சமூகம் இவரைப் போன்றவர்களை தங்கள் முன்னோடியாக எடுத்துக் கொள்ளாது.ஆளுநரின் இத்தகைய போக்கு கவலைக்குரியது.கண்டனத்திற்குரியது.ஏற்றுக்கொள்ள முடியாதது.

தொடரும் சர்ச்சை

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பை மதித்து, மத்திய அரசு- ஜனாதிபதி, ஆளுநர் ரவியை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த தீர்ப்பின் தாக்கமும் பரபரப்பும் முடிவடைவதற்குள், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஜெய் ஶ்ரீராம் முழக்கத்தை மாணவர்களிடம் எழுப்ப வைத்து பெரும் சர்ச்சையில் சிக்கிவிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+