வீடு, வீடா வெளிச்சம்.. ராமர் கோயில் திறப்பு விழா: வாசலில் கோலமிட்டு, தீபமேற்றி தமிழக மக்கள் வழிபாடு
சென்னை: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடப்பதை முன்னிட்டு, தமிழக மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் வண்ண கோலமிட்டு, தீபம் ஏற்றி வழிபட தயாராகி வருகின்றனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.. குழந்தை ராமரை பிரதிஷ்டை செய்யும் முக்கிய பூஜை இன்று பிற்பகல் 12.20 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, முறைப்படி கோயிலை திறந்து வைக்கிறார். பிரதமர் தலைமையில் இந்த ராம் மந்தீர் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.

கும்பாபிஷேகம்: இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க 8,000க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2 ஆயிரம் பேர் சாதுக்கள், 5,000 பேர் பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள்.. கோயில்களில் சிறப்பு வழிபாடும், பிரம்மாண்ட திரையில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ஒளிபரப்பவும் செய்யவுள்ளனர்.
உத்தரபிரதேச மாநில மக்கள். தீபாவளிக்கு முன்பாக சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கான தீபம் ஏற்றுவார்கள். அதே போல ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளன்று நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் ராம ஜோதி ஏற்ற வேண்டும் என்றும், அன்றைய தினத்தை தீபாவளியைப் போல கொண்டாட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

வேண்டுகோள்: இதுபோலவே, தமிழக ஆளுநரும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. ராஜ்பவன் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "இந்த வரலாற்றுப் பொன்னாளை ஒவ்வொரு வீட்டின் முன்பும் தீபம் ஏற்றி ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும். தமிழகத்தில் சகோதர, சகோதரிகள் அனைவரும் தங்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் முன்பு தீபம் ஏற்றி இந்நாளை கொண்டாடி வழிபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், இன்று தமிழகம் முழுவதும் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடுக்கு தயாராகி உள்ளனர். வாசல்களில் கோலமிட்டு, ராம ஜோதியை ஏற்றி வைக்கவும் மும்முரமாகி உள்ளனர். அதேபோல, தமிழகத்தின் கோயில்களிலும் விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் தயாராகி வருகின்றன.. இது பக்தர்களிடையே பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.













Click it and Unblock the Notifications