அதிரடி முடிவு.. தமிழ்நாட்டில் குடியேறிய வெளிமாநில ஊழியர்களை கண்காணிக்கும் போலீஸ்.. முக்கிய உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு போலீசார் முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளதாக போலீஸ் தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.
பொருளாதார ரீதியாகவும், வேலைவாய்ப்பு ரீதியாகவும் தமிழ்நாடு இந்தியாவில் மிகவும் முன்னேறிய மாநிலமாக உள்ளது. ஐடி துறை, தொழிற்துறை தொடங்கி பல்வேறு துறைகளில் தமிழ்நாடுதான் சிறந்து விளங்கிக்கொண்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் எல்லோருக்கும் வேலைவாய்ப்பு கொட்டி கிடக்கின்றன. அதாவது படிக்காதவர்கள், படித்தவர்கள் எல்லோரையும் பிழைத்துக்கொள்ள தமிழ்நாடு வழி ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது.
திராவிட கட்சிகள் இத்தனை வருடம் ஏற்படுத்திய மிகப்பெரிய சாதனை இது என்றும் கூட குறிப்பிடலாம்.

என்ன நடந்தது?
இதன் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு குடியேறும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உத்தர பிரதேசம், குஜராத், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் குடியிருக்கிறார்கள். தங்கள் மாநிலத்தில் வேலை இல்லை. போதிய ஊதியம் இல்லை. அங்கே பிழைக்க வழியில்லை என்று தமிழ்நாட்டில் குடியிருக்கிறார்கள். இப்படி தமிழ்நாட்டிற்கு வரும் நபர்களில் பெரும்பாலானவர்கள் இளம் வயதினர்தான்.

என்ன வேலை
இவர்கள் பெரும்பாலும் கட்டுமான வேலைகள், இரும்பு வேலைகள், டீ கடை, ஹோட்டல் வேலைகள், மெட்ரோ வேலைகள், சாலை போடும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள். குறைந்த சம்பளத்திற்கு இவர்கள் வேலைக்கு வருவதால் எளிதாக வேலையும் கிடைக்கிறது. முன்பெல்லாம் சென்னையில் மட்டுமே வடஇந்தியர்கள் அதிகம் இருந்தனர். இப்போதெல்லாம் கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை, திருவள்ளூர், திருவாரூர் போன்ற மாவட்டங்களிலும் கூட வடஇந்தியர்கள் அதிகம் ஆகி விட்டனர்.

சிக்கல்
இவர்களின் வருகையால் இன்னொரு பக்கம் குற்றச்செயல்களும் அதிகரித்து உள்ளன. பலாத்கார வழக்குகள், திருட்டு சம்பவங்கள், வங்கி மோசடிகள், எலக்ட்ரானிக் மோசடிகள் என்று பல்வேறு குற்றச்செயல்கள் நடக்கின்றன. வடஇந்தியர்கள் பலர் இதுபோன்ற குற்றச்செயல்களில் கைது செய்யப்பட்டு உள்ளனர். தமிழர்கள் என்றால் அவர்கள் இருக்கும் இடம், பூர்வீகம் எளிதாக தெரிந்துவிடும். ஆனால் இவர்களை அடையாளம் காண்பதில் பெரிய சிக்கல் உள்ளது. இவர்கள் அடிக்கடி இடம் மாறுவதால், வேலை மாறுவதால் இவர்களை டிராக் செய்வதில் போலீசாருக்கு சிக்கல் உள்ளது.

பாதுகாப்பு
தமிழ்நாட்டில் பல லட்சம் வடஇந்தியர்கள் வேலை செய்வதால் பாதுகாப்பு ரீதியாகவும் நிறைய சிக்கல்கள் உள்ளன. தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு போலீசார் முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளதாக போலீஸ் தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன. அதன்படி தமிழ்நாட்டில் வேலை செய்யும் வடஇந்தியர்களின் ஆதார் விவரங்களை பெற போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர்கள் வேலை செய்யும் இடங்கள், படிக்கும் இடங்கள், தங்கி இருக்கும் இடங்களில் இருந்து ஆதார் விவரங்களை பெற போலீசார் முடிவு செய்துள்ளனர். விரைவில் இந்த திட்டத்தை செயல்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள வடஇந்தியர்களை கண்டுபிடிக்க முடியும். குற்றச்செயல்கள் நடக்கும் பட்சத்தில் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அவர்களை எளிதாக கண்டுபிடிக்கவும் முடியும் என்று போலீசார் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.