பொய்.. வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதலா?.. 'இந்தியில்' வார்னிங் தந்த தமிழ்நாடு போலீஸ்.. என்னாச்சு
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதை போன்று பரப்பப்படும் வீடியோ போலியானது என காவல்துறை விளக்கமளித்துள்ளது
சென்னை: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதை போன்று பரவிவரும் வீடியோ போலியானது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த வீடியோக்களை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு காவல்துறை 'இந்தியில்' ட்வீட் செய்துள்ளது.
கடந்த ஒரு சில ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வடமாநில தொழிலாளர்கள் வாழ்வாதாரம் தேடி அதிக அளவில் வருகின்றனர். இத்தொழிலாளர்களின் வருகையை சிலர் விமர்சித்து வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் காரணமாக தமிழர்களின் வேலை வாய்ப்பு குறைந்துவிட்டதாகவும் அரசியல் அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். வட மாநிலத்துடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் ஒரு நாள் கூலி அதிகமாக இருப்பதால் அவர்கள் அதிக அளவில் தமிழ்நாட்டை நோக்கி வருகின்றனர்.
மறுபுறம், உள்ளூர் ஆட்களுக்கு கொடுக்கும் கூலியில் பாதி கொடுத்தால் போதும் என்பதால் தமிழ்நாட்டு வணிகர்களும் வடமாநில இளைஞர்களை அதிக அளவில் பணியில் அமர்த்துகின்றனர். இந்நிலையில், இத்தொழிலாளர்களுக்கு எதிராக சில அரசியல் அமைப்புகள் தொடர்ந்து பேசி வருவதால் ஆங்காங்கே சிறு சிறு சலசலப்பு ஏற்படுகிறது. இந்த சூழலில் சமூக வலைத்தளங்களில் திடீரென இரண்டு வீடியோக்கள் வேகமாக பரவ தொடங்கின.

வீடியோ
அதாவது தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் இந்த வீடியோ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இது வைரலானது. இந்நிலையில் இந்த வீடியோவின் உண்மை தன்மையை ஆராய்ந்த காவல்துறையினர் இது போலியான வீடியோ என்று கூறியுள்ளனர். மேலும் இந்த வீடியோவை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தனர். இது குறித்து தமிழ்நாடு காவல்துறை இந்தியில் ட்வீட் செய்திருந்ததாவது,

வட இந்தியர்கள்
"தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் மற்றும் இந்தி பேசும் மக்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களிலும், பிற ஊடகங்களிலும் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுகளின் உண்மை தன்மையை சரிபார்க்காமல் வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இது முழுக்க முழுக்க வதந்தியாகும். எனவே தயவு செய்து இதுபோன்ற வதந்திகளை நம்பி பரப்ப வேண்டாம். இவ்வாறு இரண்டு வீடியோக்கள் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒன்று திருப்பூரில் பீகார் தொழிலாளர்களுக்கும், ஜார்கண்ட் தொழிலாளர்களுக்கும் இடையே நடந்த மோதல்.

சட்ட நடவடிக்கை
மற்றொரு வீடியோ, கோவையில் உள்ளூர் மக்கள் மோதிக்கொண்ட சம்பவம். எனவே தமிழர்களால் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக கூறும் தகவலில் உண்மையில்லை. ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் சட்டம் ஒழுங்கை திறம்பட செயல்படுத்தும் மிகவும் அமைதியான மற்றும் பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இந்த வீடியோக்களின் தகவல்கள் தவறானவை . எனவே இதுபோன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மீறும் பட்சத்தில் அவர்கள் மீறு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல்
அரசியல் அமைப்புகள் ஒருபுறம் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக பேசி வரும் நிலையில், அன்றாடம் இந்த தொழிலாளர்கள் சில எதிர்பாராத தாக்குதலை சந்திக்கின்றனர். சமீபத்தில் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த வடமாநில தொழிலாளி மீது தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் 'உங்க ஊருக்கே போங்கடா' என்று கூறி கடுமையாக தாக்கியிருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. இதனையடுத்து தாக்குதல் நடத்திய தமிழர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
