Tamil Nadu: குஜராத்தை ஓரம் கட்டி.. வியட்நாமுடன் போட்டியிடும் தமிழகம்! அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு
சென்னை: தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்குவதாகவும் குஜராத், உத்தரப் பிரதேசத்துடன் தமிழ்நாடு போட்டியிடவில்லை மாறாக வியட்நாமுடன் போட்டியிருக்கிறது என்று அமெரிக்க பொருளாதார நிபுணரான, CSIS நிறுவனத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் ரோஸோ பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
புளூம்பெர்க் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர் இந்த விஷயத்தை தெரிவித்திருக்கிறார். "தமிழ்நாட்டில் முதலீடு மழை பொழிகிறது. இந்தாண்டு மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கான முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்றுள்ளது. இதற்கு தமிழக அரசின் அணுகுமுறையே காரணம்.

தொழில் வளர்ச்சி பரவல் அதிகமுள்ள மாநிலமாகவும், இந்தியாவின் கார், எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி அதிகமுள்ள மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது. முதலீட்டாளர்கள், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதா? அல்லது வியட்நாமில் முதலீடு செய்வதா? என்றுதான் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். குஜராத், மகாராஷ்டிரா மட்டுமின்றி வியட்நாமுடன் போட்டியிடும் அளவிற்கு தமிழ்நாடு திகழ்கிறது" என்று அவர் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் திராவிடல் மாடல் அரசுதான். இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா... அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11-ஆம் ஆண்டில். அப்போது கலைஞர் ஆட்சி! இப்போது கலைஞர் வழி நடக்கும் திராவிட மாடல் ஆட்சி! இரண்டுமே கழக ஆட்சி!
2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்றபோது பலரது புருவமும் உயர்ந்தது. "இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்?" என்றார்கள்! இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது" என்று தனது x தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications