தமிழக அரசு மருத்துவமனைகளில் அதிகரித்த அலங்கோலம்! மெத்தனத்தால் பறிபோகும் உயிர்கள்! சுகாதாரமும் இல்லை!
சென்னை: "நவீன மருத்துவம், உலகத் தரம், மெடிக்கல் டூரிசம் தலைநகரம்.." என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் "டப்" என்று கரண்ட் "கட்" ஆனது. மூன்று மணி நேரம் முழுக்க மின்சாரம் இல்லை!

21ஆம் நூற்றாண்டு தமிழ்நாட்டில், 70க்கும் மேலான நோயாளிகள் இருளில் தவித்தார்கள். மின்கம்பி பழுதானதால், ஜெனரேட்டர் வேலை செய்யும்வரை நோயாளிகளும், மருத்துவர்களும் காத்திருக்க வேண்டியதுதானாம். "சரி, யாரும் உயிரிழக்கவில்லையே!" என்று அரசு பெருமைபட்டுக்கொள்கிறது. இதுதான் நம் அரசு மருத்துவமனைகளின் நிலை!
மருத்துவர் இல்லாமல் இன்டர்ன் சிகிச்சை
இன்னொரு கொடுமை, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், நடந்தது. 4 வயது சிறுவன், கடந்த பிப்ரவரி மாதம், உடல்நலக் குறைவு காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். மருத்துவர்கள் சிறுவனுக்கு ஸ்கேன் (Scan) செய்ய பரிந்துரைத்தனர். ஸ்கேன் செய்வதற்கு முன்பு, சிறுவனுக்கு கான்ட்ராஸ்ட் ஊசி போட வேண்டியிருந்தது. அப்போது பணியில் மருத்துவர் இல்லையாம். அதற்காக, B.Sc. ரேடியாலஜி இறுதியாண்டு படித்து பயிற்சி (Internship) செய்து வந்த மாணவர் அந்த ஊசியை சிறுவனுக்கு போட்டுள்ளார். தவறான முறையில் ஊசி போடப்பட்டதால், சிறுவனுக்கு கடுமையான ஒவ்வாமை (Severe Allergic Reaction) ஏற்பட்டது.இதையடுத்து சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதெல்லாம் மெத்தனம் என்ற சொல்லுக்குள் அடங்காத கொடுமை. அராஜகம் என்றுதான் பெயரிட வேண்டும்.
இது தான் நம் அரசு மருத்துவமனைகளின் "சூப்பர் ஸ்பெஷாலிட்டி" சேவை! மருத்துவர் இல்லாத நேரத்தில், இன்டர்ன்கள், செவிலியர்கள் தான் எல்லாம்! மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை - "பணியாளர்களே இல்லை, நோயாளிகள் மட்டும் அதிகம்!"

மாநிலம் முழுவதும் 30% மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 18,000 பதவிகளில் 5,000 காலியாக இருக்க, வேலையில்லாத மருத்துவர்களும், ஓய்வு பெற்றவர்களும் வீட்டில் உட்கார, அரசு மருத்துவமனையில் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலைதான் தமிழகத்தில். சில மாதங்கள் முன்பு, தமிழக அரசு மருத்துவர் சங்கமே இந்த பற்றாக்குறையை வெளிப்படையாக சொல்லி குமுறியிருந்தது. அப்புறம் ஏன் இன்டர்ன்ஷிப் மாணவர் ஊசி போடும் நிலை வராது?
செவிலியர் பற்றாக்குறை 65,000-க்கு மேல். ஒரு ICU-வில் 12 பேருக்கே ஒரு செவிலியர், ஒரு வார்டில் 40 நோயாளிகளுக்கு ஒரே செவிலியர். "மருத்துவ சுற்றுலா தலைநகரம்" என்றால் இதுதான் போலும்!
சொன்னது என்னாச்சு?
2021 சட்டமன்ற தேர்தலில், "ஒப்பந்த செவிலியர்களை நிரந்தரமாக்குவோம்" என்ற வாக்குறுதியை திமுக தனது தேர்தல் அறிக்கையில் (வாக்குறுதி எண் 356) முக்கியமாக வெளியிட்டது. 2015-ல் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்த 12,000 செவிலியர்களில் 7,000 பேர் மட்டுமே நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர்; மீதமுள்ளவர்கள் இன்னும் குறைந்த சம்பளத்திலும், வேலை பாதுகாப்பு இல்லாமல் பணியாற்றி வருகிறார்கள். செவிலியர்கள் மட்டுமல்லாமல், ஆய்வக உதவியாளர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் ஒப்பந்த அடிப்படையில் குறைந்த சம்பளத்தில், அதிக வேலைச்சுமையுடன் பணியாற்றி வருகிறார்கள்.
அரசு வழங்கும் தொகையிலிருந்து பெரும்பகுதி தொகை "கான்ட்ராக்டர்" களிடம் போகிறது என்றும், பணியாளர்களுக்கு குறைந்த தொகை மட்டுமே வழங்கப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகளாகவே போய் விட்டன என்றே பொதுமக்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்
அறுவை சிகிச்சைக்கு அடிதடி
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் 40 ஆண்டுகளுக்கு மேலான பழமையான "ஜெனரல் வார்டு" கடந்த வாரம் ஓரிரவு இடிந்து விழுந்தது. இதனால், மருத்துவமனையின் அறுவை சிகிச்சை கையாளும் திறன் 50% குறைக்கப்பட்டது. நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த வார்டில் தினமும் 20 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றன. தற்போது இது 10-க்கு மேல் இல்லை. குறைக்கப்பட்ட அறுவை சிகிச்சை எண்ணிக்கையால், நோயாளிகள் மற்றும் உறவினர்கள் சண்டை, கூச்சல்கள் போட்டு வருகின்றனர். "என் மகனுக்கு முதலில் சிகிச்சை" என்ற ஒருவர் vs "என் தந்தைக்கு அவசரம்" என்ற மற்றவர் போன்ற காட்சிகள் அங்கு, தினசரி நிகழ்வு. 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது, "அனைத்து பழைய மருத்துவமனைகளையும் புதுப்பிப்போம்" என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. அப்படியானால் ஸ்ரீரங்கம் மருத்துவமனை என்ன செவ்வாய் கிரகத்திலா இருக்கிறது?
கழிவுநீர், கழிப்பறை, துர்நாற்றம்
சென்னையின் புகழ்பெற்ற ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கழிவுநீர் தேங்கி, கழிப்பறைகள் வாரம் முழுக்க சுத்தம் செய்யப்படாமல் நாறிக்கொண்டு கிடந்த கதை ஊடகங்களில் வெளியாகி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டதும் சமீப கால சோக வரலாறு.
வீடியோ கால் சிகிச்சை
திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், டாக்டர் சந்திரசேகரன் என்பவர் சில மாதங்களாக மருத்துவமனைக்கே வராமல் செல்போன் வீடியோ அழைப்புகள் மூலம் செவிலியர்களுக்கு வழிகாட்டி, நோயாளிகளை சிகிச்சை அளிக்கச் செய்துள்ளார் என்று தெரியவந்தது. பிறகு மருத்துவமனை சீல் வைக்கப்பட்டது. அரசு மீது அச்சமில்லை என்பதுதான் மருத்துவரின் துணிகரத்திற்கு காரணம்.
சோக கொடுமை
இன்னொரு சோக சம்பவம் படிப்பவர்கள் கண்ணை கலங்க செய்யும். கன்னியாகுமரி மாவட்டம், வடக்கு தாமரைகுளத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி ராதிகா கர்ப்பிணியாக இருந்தார். நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ராதிகாவை சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, பிரசவத்திற்காக அவரை அனுமதிக்க டாக்டர் அறிவுறுத்தவில்லை. பின்னர் கரு இறந்துவிட்டது தெரியவந்ததால் மருத்துவர்கள் சிசேரியன் செய்து கருவை அகற்றினர். அரசு மருத்துவமனையின் அலட்சியம் என்பதுதான் குற்றச்சாட்டாக மாறியது. கடைக்கோடி கன்னியாகுமரி மாவட்டம் இப்படியென்றால், வடக்கே திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனை ஒன்றிலும் கலங்கடிக்கும் சம்பவம் 2 நாட்கள் முன்பு நடந்தது.
ஆரணியைச் சேர்ந்த பழ வியாபாரி சூர்யாவுக்கு நெஞ்சுவலி வந்த நிலையில், ஆரணி அரசு மருத்துவமனையில் முறையான பரிசோதனை செய்யாமல் வீட்டிற்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளனர். அவருக்கு 8 மாத குழந்தை உள்ளது.
ஒருபக்கம், ஸ்டாலின் சொல்வது "மருத்துவ சுற்றுலா தலைநகரம்"; நிஜத்தில் "மருந்தும் இல்லை, மரியாதையும் இல்லை" என்ற நிலைதான் பல இடங்களில்! மருத்துவர்கள் அலட்சியம், மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை, சிதைந்த கட்டிடங்கள், சுத்தம் இல்லாத கழிப்பறைகள். எல்லாவற்றையும் விட நோயாளிகள் உயிர் பற்றி அக்கறையில்லாத பல அரசு மருத்துவமனைகள். இதெல்லாம் தான் நம் அரசு மருத்துவமனைகளின் சமீப கால "மாடல்".












Click it and Unblock the Notifications