எங்கே போனார்கள் சிங்கப்பெண்கள்? ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தமிழகத்தில் பேரதிர்ச்சி
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் ஐந்து இடங்களில் சிறுமிகளுக்கு எதிராக நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், தாம்பரம், பூந்தமல்லி மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அரங்கேறிய இந்தக் கொடூர சம்பவங்கள், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாட்டையும், சட்ட ஒழுங்கையும் கேள்விக்குறியாக்கியுள்ளன. சன் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, போலீஸார் அனைத்து வழக்குகளிலும் உடனடியாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
இந்தத் தொடர் சம்பவங்களில் மிகக் கொடூரமானது திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடந்துள்ளது. அங்கு வசித்த 3 வயது பெண் குழந்தை திடீரென காணாமல் போனதாக பெற்றோர் புகார் அளித்தனர்.

உள்ளூர் மக்களுடன் இணைந்து தனிப்படை அமைத்து தேடிய போலீஸார், ஒரு பகுதியில் இருந்து குழந்தையின் சடலத்தை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இந்தக் காட்டுமிராண்டித் தனமான செயலுக்கு உடனடியாக குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. "3 வயது குழந்தைக்கு இப்படி நடக்கலாமா?" என கேள்வி எழுப்பும் மக்கள், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இந்தச் சோகம் மறைவதற்குள் புறநகர் பகுதிகளில் மேலும் பல அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகின. திருவள்ளூர் பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். உடல்நிலை மாற்றத்தைக் கண்ட பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீஸார் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்தனர். அதேபோல், சென்னைக்கு அருகிலுள்ள தாம்பரத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் அத்துமீறல் நடைபெற்றது. அப்பகுதி மக்கள் இச்சம்பவத்தைக் கண்டு கடும் கொந்தளிப்புக்கு உள்ளாகினர். உள்ளூர் போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பூந்தமல்லியிலும் இதேபோன்ற சம்பவம் அரங்கேறியது. அங்கு 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். போலீஸார் தங்கள் தீவிர நடவடிக்கையின் மூலம் குற்றவாளியை தப்பிச் செல்லவிடாமல் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த மூன்று சிறுமிகளும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மனநல ஆலோசனைக்காக குழந்தைகள் நலக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் சென்னையிலும் பாதுகாப்பு குறைபாடு வெளிப்பட்டது. 12 வயது பள்ளி சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியின் தகவலின் அடிப்படையில் பெற்றோர் போலீஸை அணுகினர். நகரப் பகுதிகளில் கண்காணிப்பு அதிகரித்திருந்தாலும் இத்தகைய சம்பவங்கள் தொடர்வது பெற்றோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகர போலீஸார் POCSO சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர்.
ஒரே நாளில் ஐந்து POCSO வழக்குகள் பதிவானது தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது. சமூக ஆர்வலர்கள், "புகார்கள் உடனுக்குடன் வருகின்றன என்பது நல்லது. ஆனால் 3 வயது குழந்தை கொலை செய்யப்படும் அளவுக்கு சட்ட ஒழுங்கு தளர்ந்துள்ளதா?" என கேள்வி எழுப்புகின்றனர். பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த ஐந்து வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றங்கள் மூலம் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பது தமிழக மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிராக மத்திய அரசின் POCSO சட்டம் கடுமையான விதிகளை கொண்டுள்ளது. இருப்பினும், செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டிய நேரம் இது என்பது அனைவரின் கருத்தாகவும் உள்ளது. முக்கியமாக சிங்கப்பெண் போலீஸ் படை.. வெறுமனே ரீல்ஸ் மட்டும் போடாமல் நேரடியாக களத்தில் தவறுகளை தடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications