பெண் குழந்தைகளுக்கு.. புற்றுநோய் தடுப்பூசி இலவசம்! மா.சுப்பிரமணியன் கொடுத்த மாஸ் அப்டேட்
சென்னை: கடந்த 4000 ஆண்டுகளாக மனித இனம் புற்றுநோயுடன் போராடி வருகிறது. சமீப காலங்களில் இதற்கான சிகிச்சைகள் நவீன வடிவத்தை எட்டியுள்ளன. குறிப்பாக ரஷ்யா, புற்று நோய்க்கு தடுப்பூசிகளை கண்டுபிடித்திருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் 1 முதல் 14 வயதுடைய பெண்களுக்கு இலவசமாக புற்றுநோய் தடுப்பூசி போடப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "கடந்த நிதி நிலை அறிக்கையில் புற்றுநோய் தடுப்பூசி குறித்து முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். குறிப்பாக இளம்பெண்களை இந்த பாதிப்பில் இருந்து மீட்க, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் எடுக்காத முன்முயற்சியை முதலமைச்சர் தமிழ்நாட்டில் அறிவித்திருந்தார். 1 முதல் 14 வயதுடைய பெண்களுக்கு இலவசமாக புற்றுநோய் தடுப்பூசி போடப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. இதற்காக ரூ.38 கோடியை ஒதுக்கியுள்ளார்.

இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டிருக்கிறது. ஒப்பந்தம் முடிந்த பின்னர், இந்த திட்டம் அமலுக்கு வரும். தனியார் மருத்துவமனையில் பல ஆயிரக்கணக்கில் செலவு செய்து இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்வது அனைத்து தரப்பு மக்களுக்கும் சாத்தியம் இல்லை. எனவே சாமானிய மக்களும் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த இருக்கிறது" என்று கூறியிருந்தார்.
உலகம் உருவானதிலிருந்து புற்றுநோய் பாதிப்பு அச்சுறுத்தலாக இருக்கிறது. டைனோசர்களுக்கும், பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மீன்களுக்கும் கூட புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு ஏன் தாவரங்கள் கூட புற்றுநோய் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்திருக்கிறது. மனிதர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது 4000 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எகிப்தியர்கள் மார்பக புற்றுநோய் பாதிப்புகளை கண்டறிந்து, அதை குறிப்பெடுத்து வைத்திருக்கிறார்கள். இந்த பாதிப்புக்கு சிகிச்சையே இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
புற்றுநோய் பாதிப்புகளை சரி செய்ய கடந்த 100-150 ஆண்டுகளாக மனித குலம் தீவிரமாக போராடி வருகிறது. குறிப்பாக சிகிச்சைகள் நவீனமடைந்திருக்கின்றன. கீமோதெரபி போன்ற சிகிச்சைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும் இதிலும் சிக்கல் இருக்கின்றன. இந்நிலையில், புற்றுநோய்க்கு மருத்துவ உலகம் தடுப்பூசியை கண்டுபிடித்திருக்கிறது. இது குறிப்பிட்ட ஒரு வைரஸ் கிருமியின் புரதத்தை உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்ட செய்கிறது.
எதிர்காலத்தில் புற்றுநோயை உருவாக்கும் வைரஸ்கள் உடலில் வளர்ந்தாலும், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் அந்த வைரஸை அடையாளம் கண்டு அழித்துவிடுகிறது. இது எல்லா வகை புற்றுநோய்க்கும் பொருந்தாது. இருப்பினும் பெண்களை அதிகம் பாதிக்கும் கர்ப்பப்பைவாய் புற்றுநோயை தடுக்க உதவும். அதேபோல கல்லீரல் புற்றுநோயையும் தடுக்க உதவும். அந்த வகையில் இந்த தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முன்னெடுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பலரும் வரவேற்றிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications