சபாஷ்.. தமிழ்நாடு தான் ‘டாப்’.. திமுக அரசை பாராட்டித் தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக தெரியுமா?
சென்னை : கிராமப் பகுதிகளுக்கு இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் அதிக அளவு மின் விநியோகம் செய்கிறது. தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கான மின் விநியோகம் தேசிய சராசரி அளவைவிட அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய சராசரி அளவைவிட வெகுவாக உயர்ந்துள்ளதைப் பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய அளவில் 2018-2019ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 70 நிமிடங்களாக வழங்கப்பட்டு வந்த நிலையில், 2021-2022 ஆம் ஆண்டில், நாளொன்றுக்கு அது 20 மணி நேரம் 53 நிமிடங்களாக இருக்கிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2018-2019 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 77 நிமிடங்களாக ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் விநியோகம், 2021-2022ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, தனது பாராட்டினைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில், மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேலும் மேம்படுத்திட ஏதுவாக, 24 மணி நேரமும் மின் விநியோகத்தினை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு உதவிடும் என்றும் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்கே சிங் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications