அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை.. நாட்டிலேயே முதலிடம் பிடித்த தமிழ்நாடு
சென்னை: இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் தரமான மருத்துவ சிகிச்சை மற்றும் அரசு மருத்துவர்கள் மீதான நம்பகத்தன்மையே இத்தகைய சாதனைக்கு காரணம் என அதிகாரிகள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னிலை வகிக்கிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பது உள்கட்டமைப்பு, தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை முன்னெடுத்தல் போன்றவற்றில் நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு உள்ளது என்றால் அது மிகையல்ல.

தமிழக அரசு மருத்துவமனைகள்
குறிப்பாக மருத்துவத்துறையில் தமிழ்நாடு தலைசிறந்து விளங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கட்டமைப்பு மற்றும் மருத்துவர்களின் தரம் ஆகியவற்றால் இந்தியாவின் மருத்துவ தலைநகராக சென்னை விளங்குகிறது. வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் கூட தமிழ்நாட்டிற்கு வந்து மருத்துவ சிகிச்சை பெற்று செல்வதை பார்க்க முடிகின்றது. அந்த அளவுக்கு தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தனியார் மருத்துவமனைகளில் செய்ய முடியாத சில அதிநவீன சிகிச்சைகள் மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சைகளை கூட அரசு மருத்துவர்கள் செய்து சாதனை படைத்து வருகிறார்கள். இந்த நிலையில்தான், இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
தரமான மருத்துவ கட்டமைப்பு
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் தரமான மருத்துவ சிகிச்சை மற்றும் அரசு மருத்துவர்கள் மீதான நம்பகத்தன்மையே இத்தகைய சாதனைக்கு காரணம் என அதிகாரிகள் பெருமிதம் தெரிவித்துள்ளனர். தலைநகர் சென்னையில் மட்டுமின்றி மாவட்ட அளவிலும் தரமான மருத்துவ கட்டமைப்புகளுடன் அரசு மருத்துவமனைகள் இயங்கி வருவதாகவும், அங்கு அளிக்கப்படும் தரமான சிகிச்சைகள் ஆகியவையே மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடி செல்வதற்கு காரணம் எனவும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications