செஸ் ஒலிம்பியாட்.. சென்னை டூ மாமல்லபுரம்.. இலவச பேருந்துகள் இயக்கம் என அறிவிப்பு!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு இலவச பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தத் தொடரில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

தமிழக அரசு தீவிரம்
செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆலோசனை கூட்டம்
இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட விளம்பரப் பாடல், தீச்சுடர் என மக்களை கவரும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் மாமல்லபுரத்தில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக தலைமைச் செயலாளர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் இன்று நடத்தப்பட்டது.

இலவச பேருந்து
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவச பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இயக்குவதாக அறிவித்துள்ளது. இந்த இலவச பேருந்து சேவை வரும் 25ம் தேதி முதல் ஒருமணி நேரத்துக்கு ஒரு பேருந்து சென்னை முதல் மாமல்லபுரம் வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 5 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

19 இடங்களில் நிறுத்தம்
இந்த இலவச பேருந்து சேவை அடையாறு, மத்திய கைலாஷில் இருந்து புறப்படும் என்றும் ராஜீவ்காந்தி சாலை வழியாக சோழிங்கநல்லூர் சென்று, அங்கிருந்து ஈ.சி.ஆர். சாலை வழியாக மாமல்லபுரத்துக்கு சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் திருவான்மியூர், பி.டி.சி. குவார்டர்ஸ், முட்டுக்காடு உட்பட 19 இடங்களில் நின்று, பயணிகளை ஏற்றி செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த இலவச பேருந்து சேவை வரும் 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications