அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. கோடையில் சர்ப்ரைஸ்.. தமிழக சுற்றுலா துறை அசத்தல்.. அதென்ன LTC
சென்னை: கோடைகாலம் கொளுத்தி கொண்டிருக்கும் நிலையில், சுற்றுலா பயணிகள் கோடைவாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.. இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கும் மகிழ்ச்சி செய்தியை தமிழக சுற்றுலாத்துறை வெளியிட்டிருக்கிறது.. குறிப்பாக விடுப்புப்பயண சுற்றுலாவை அறிமுகம் செய்துள்ளது. LTC என்ற விடுப்பு பயணச்சலுகை பற்றி தெரியுமா? இதன் ஸ்பெஷாலிட்டி என்ன? சுருக்கமாக பார்ப்போம்.
கோடை காலம் துவங்கிவிட்டது.. கடந்த வெயிலின் தாக்கம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தென்பட துவங்கி விட்டது.. இந்த மார்ச் மாதம் முழுவதுமே 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்திவிட்டது. இதனால் அடுத்து வரப்போகும், ஏப்ரல், மே மாதங்களில் வெப்பத்தின் கொடுமை இன்னும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சுற்றுலா துறை
வெயிலுக்கு பயந்து இப்போது வீடுகளில் மக்கள் முடங்க துவங்கிவிட்டனர்.. மேலும் பலர் கோடை விடுமுறையை கழிக்க சுற்றுலா கிளம்பிவிட்டார்கள்.. பெரும்பாலான பள்ளி மாணவர்களுக்கு தேர்வு முடிவடைந்து விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளதால், குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானல் என குளுமையான மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலாவுக்கு தயாராகி வருகிறார்கள்.
வழக்கமாக கோடையில், தமிழக சுற்றுலாத்துறையும், பயணிகளின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், சிறப்பு ஏற்பாடுகளை செய்து தரும்.. அந்தவகையில் இந்த வருடம், அரசு ஊழியர்களுக்கும் விடுப்புப்பயண சுற்றுலாவை அறிமுகம் செய்திருக்கிறது. இதற்காகவே, எல்டிசி (LTC) என்ற விடுப்பு பயணச்சலுகை மூலம் சுற்றுலாவிற்கு அழைத்து செல்வதாக அறிவித்துள்ளது.
சூப்பரான சலுகை வசதி
LTC (Leave Travel Concession) என்பது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஒரு முக்கியமான பயண சலுகையாகும். இந்த சலுகையின் மூலம், ஊழியர்களுக்கு அரசு உத்தரவின்படி, ஊழியர்களின் குடும்பத்தோடு பயணம் செய்ய வசதியான முறையில் உதவுகிறது. அத்துடன் இது அரசு ஊழியர்கள் குடும்பத்துடன் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் பயணிக்கவும் உதவும்.
இந்த LTC பயணச் சலுகையில்தான், ஒரு புதிய மாற்றம் மற்றும் மேம்படுத்தல் ஏற்பட்டு, அரசு ஊழியர்களுக்கான விடுப்புப் பயணச் சுற்றுலா (Leave Travel Tour) என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதனால், அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் தங்களின் விடுப்புக்காலங்களில் பயணம் மேற்கொண்டு பயணச் செலவுகளை ஓரளவு குறைக்க முடியும். முக்கியமாக, ஊழியர்கள் தாங்கள் செல்லும் இடம் மற்றும் செல்லும் வழியையும் தனிப்பட்ட முறையில் தேர்வு செய்து கொள்ளலாம்.. சுருக்கமாக சொல்லப்போனால், அரசு ஊழியர்கள் உள்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா மேற்கொள்ளலாம்.. இதற்கான செலவுகள் அனைத்தும் திருப்பி வழங்கப்படும் என்பதே LTC-முக்கிய அம்சமாகும்.
விடுப்பு பயணச் சலுகை சுற்றுலா
இந்நிலையில், சுற்றுலாத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், "அரைநாள் முதல் 14 நாட்கள் வரையில் 52 வகையான தொகுப்புச் சுற்றுலாக்களை இயக்கி வருகிறது. குழுவாகச் செல்ல விரும்புகிற சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை நிறைவு செய்வதற்காக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அவர்களுக்கேற்ற ஆயத்த சுற்றுலாக்களையும் அரசு ஊழியர்களுக்கான விடுப்புப் பயணச் சலுகை சுற்றுலாக்களையும் (LTC) ஏற்பாடு செய்கிறது.சுற்றுலாப்பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் தங்களது கோடை விடுமுறையை முன்னிட்டு குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்கின்ற வகையில் 3 நாட்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு- ஒகேனக்கல், குற்றாலம், மைசூர் பெங்களூர் மற்றும் மூணார் சுற்றுலாக்கள் போன்ற கோடைக்கால சுற்றுலா பயணத்திட்டங்கள்,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக இணையதளம் மூலம் முன்பதிவு தொடங்கப்பட்டு, சுற்றுலா பயணிகளால் முன்பதிவுகள் நடைபெற்றுவருகிறது.
சிறப்பு தொகுப்புகள்
மேலும் இக்கோடைக்கால சுற்றுலாக்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் கட்டணத்தில் சிறப்பு சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மேற்கண்ட சுற்றுலாக்களில், 3 நாட்கள் கொடைக்கானல் சுற்றுலாவில் 6 தொகுப்புகளில் இதுவரை 48 நபர்கள் முன்பதிவு செய்துள்ளனர். 3 நாட்கள் ஊட்டி சுற்றுலாவில் 5 தொகுப்புகளில் இதுவரை 41 சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல், 3 நாட்கள் மூணாறு சுற்றுலா தொகுப்பில் 2 தொகுப்புகளில் முன்பதிவு தொடங்கப்பட்டு, இதுவரை ஒரு தொகுப்பில் 9 சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து, இச்சுற்றுலா இயக்கப்பட்டுள்ளது. மற்றொரு தொகுப்பில் 4 சுற்றுலாப்பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
ஆன்லைன் அட்வான்ஸ் புக்கிங்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மற்ற பயணத்திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com இணையதள பக்கத்திலும், அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம்.
மேலும் கூடுதல் விவரங்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தொலைபேசி எண்கள்: கட்டணமில்லா தொலைபேசி எண்.18004251111 044-25333333, 044-25333444 மற்றும் வாட்ஸ் அப் எண். 7550063121 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்" என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications