ரெடி? அரசு பஸ்ஸில் நிவாரண பொருட்கள்.. கட்டணமே இல்லை.. கிளம்புது எக்ஸ்பிரஸ் பஸ்கள்.. தமிழக அரசு மாஸ்
சென்னை: மழைநீரில் தென்மாவட்டங்கள் தத்தளித்து வரும்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு பஸ்களில் எந்தவித கட்டணமும் இல்லாமல் நிவாரண பொருட்களை அனுப்பலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
வடகிழக்கு பருவமழை தென்மாவட்டங்களை கதிகலங்க செய்துவிட்டது.. வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மழை பொழிந்துள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்தது. தாமிரபரணி கரையோரம் உள்ள பல கிராமங்கள் தனித்தனி தீவுகளாக மாறிவிட்டன..

மீட்பு படைகள் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், இந்த மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 10 பேரு உயிரிழந்துள்ளதாக தமிழக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உறுதிப்படுத்தியிருக்கிறார்.
குடிநீர் உணவு: இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் உணவு, குடிநீர், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் திண்டாடினர்.. இந்த பகுதி மக்களை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். மேலும், அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களும் விநியோகிக்கப்பட்டன.
பல இடங்களில் மழை வெள்ளத்தின பாதிப்பு காரணமாக சாலைகள் சேதமடைந்திருக்கின்றன.. இதனால், நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் தாமதமாகி வரும் நிலையில், பல தடைகளை கடந்து மீட்பு குழுவினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர்..
வெள்ள பாதிப்பு: ஆனால், வெள்ளம் பாதித்த பகுதிகளில் தற்போது தண்ணீர் வடிந்து வருகிறது.. இழந்துபோன மின்சார இணைப்பையும், நெட்வொர்க் வசதியையும் தற்போதுதான் பெற்றுள்ளனர். எனினும், அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தேவையாக உள்ளன..
இந்நிலையில்தான், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை, கட்டணமின்றி அரசு பஸ்களில் அனுப்பலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது..
இப்படி அனுப்பப்படும் நிவாரண பொருட்கள் 4 மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு வந்து சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். அரசு விரைவு பஸ்களில் உள்ள சுமை பெட்டிகள் மூலம் நிவாரண பொருட்களை அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது..
கட்டணம் இல்லை: தென் மாவட்ட மக்களுக்கு அரசு பஸ்களில் எந்தவித கட்டணமும் இல்லாமல் நிவாரண பொருட்களை அனுப்பலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதால், நிவாரண பொருட்களை அதிகளவில் பொதுமக்கள் அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, 3 நாட்களுக்கு பிறகு திருச்செந்தூரில் பொது போக்குவரத்து துவங்கியிருப்பதால், மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக, அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்... அதுமட்டுமல்ல, திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் இதர பகுதிகளில் தஞ்சமடைந்துள்ள பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி: வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு இந்த பஸ்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.. தமிழக அரசின் இந்த அறிவிப்பானது, திருச்செந்தூர் பக்தர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications