தமிழகத்தில் 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு.. என்ன காரணம் தெரியுமா
சென்னை: தமிழகத்தில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்றைய தினம் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நேற்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் வெறும் 60.70 % வாக்குகள் மட்டுமே பதிவானது. நேற்று பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் ஜன 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

நாளை மறுவாக்குப்பதிவு
தமிழகத்தில் ஆங்காங்கே சிறுசிறு பூசல்கள் ஏற்பட்டாலும் பெரும்பாலும் அமைதியான முறையிலேயே தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து பிரச்சினை ஏற்பட்ட இடங்களில் என்ன நடந்தது என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டது. இதன் அடிப்படையில் சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகத்தில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கே
சென்னை வண்ணாரப்பெட்டை பகுதியில் உள்ள 51ஆவது வார்டு 1174 வாக்குச்சாவடி, சென்னை பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் வார்டு எண் 179இல் 5059 வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், மதுரை திருமங்கலம் நகராட்சி 17ஆவது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 17, அரியலூர் ஜெயங்கொண்டம் நகராட்சி 16ஆவது வார்டு வாக்குச்சாவடிகள் 16M, 16W மற்றும் திருவண்ணாமலை நகராட்சி 25ஆவது வார்டு வாக்குச்சாவடிகள் 57M, 57W வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடதுகை நடுவிரலில் அழியாத மை
நேற்று நடைபெற்றதைப் போலவே காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை நடைபெறும் வாக்குப்பதிவில் வாக்காளர்களுக்கு இடதுகை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில தேர்தல் ஆணையம்
நாளை மறுவாக்குப்பதிவில் பதிவாகும் வாக்குகளும் பிப்.22இல் எண்ணப்பட்டு முடிவுகள் ஒன்றாக அறிவிக்கப்படும். நாளைய தினம் பொதுமக்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் வாக்களிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஓடைக்குப்பம் வார்டு எண் 179இல் திமுகவினர் இவிஎம் இயந்திரங்களை உடைத்ததாக வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அங்கு வாக்குப்பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

6 வார்டுகள்
முன்னதாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடங்கும் முன்பு 6 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர் மரணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அந்த வார்டுகளில் எப்போது வாக்குப்பதிவு நடைபெறும் என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பில் எதையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications