மதுரை வாக்குச்சாவடியில் கத்திக் குத்து.. ரத்த வெள்ளத்தில் சரிந்த பெண்! தேர்தலின்போது பயங்கரம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. எனினும், சில இடங்களில் குழப்பங்கள், வாக்குவாதங்கள் நிகழ்ந்துள்ளன. மதுரையில் வாக்குச்சாவடியில் கத்திக் குத்து சம்பவம் அரங்கேறியுள்ளது.
இன்று மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்கள் ஓட்டு போட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த தேர்தலை விட அதிக அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன. 5 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 82 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

சட்டசபை தேர்தல் பரபரப்பாக நடைபெற்றுள்ள நிலையில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமைச் செயலகத்தில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஆய்வு செய்தார். மேலும் தேர்தல் அலுவலர்கள், காவல்துறையினர் இவர்களுடன் பதட்டமான வாக்குச்சாவடிகள் எனக் கருதப்படும் வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் என ஆயிரக்கணக்கானோர் பணியாற்றினர். எனினும் ஆங்காங்கே சில அசம்பாவித நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த மேலக்கோட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த மாரிமுத்து என்பவருக்கும், பாலமுருகன் என்பவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பாலமுருகன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை மாரிமுத்துவை நோக்கிக் குறிவைத்து வீசியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் இருந்து மாரிமுத்து நூலிழையில் தப்பினார். ஆனால், பாலமுருகன் வீசிய கத்தி தவறுதலாக மாரிமுத்துவின் அருகில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவரின் காலில் பலமாகப் பாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அந்தப் பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கத்தி வீசிய பாலமுருகன் கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை பூம்புகார் தொகுதிக்குட்பட்ட ஜமாலியா நடுநிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருந்த போது அங்கு வந்த காட்டுச்சேரியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தலைமைக் காவலர் விக்னேஷ் என்பவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். விசாரணையில் பிரபாகரனுக்கு போலீசாரை கண்டாலே பிடிக்காது என்றும் இதே போல் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் போலீசாரை தாக்கிய வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடியை தங்கள் பகுதியில் இருந்து ஊருக்குள் மாற்றியதை கண்டித்து காட்பாடி தொகுதி பொன்னை அருகே பாலகுப்பம் பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்கு உட்பட்ட கோட்டக்குப்பம் கிராமத்தில் ஏராளமான மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10 மற்றும் 11ஆவது வார்டு மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் நுழைத்து விட்டதாக கூறி ஒரு தரப்பினர் அவரை வெளியேற்றுமாறு காவல்துறையுடம் புகார் அளித்துள்ளனர். மற்றொரு தரப்பினரோ அந்த நபரை வெளியேற்றக் கூடாது என கோஷம் எழுப்ப அங்கு வந்த துணை ராணுவத்தினர் அந்த சந்தேகத்துக்குரிய நபரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.














Click it and Unblock the Notifications