சென்னையில் அதிகாலையில் பனி மூட்டம்...கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு லேசான மழை
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழகம் புதுச்சேரியில் இன்று வட கடலோர மாவட்டங்களில் முதல் மூன்று நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையில் காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை முடிந்து பனி காலம் தொடங்கி விட்டது. இரவிலும் அதிகாலையிலும் குளிர் வாட்டினாலும் பகல் நேரங்களில் பங்குனி வெயில் போல சுட்டெரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை. உதகையில் உறைபனி வாட்டி எடுக்கிறது.

இந்த நிலையில் இன்றைய தினம் வட கடலோர தமிழகம், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் கணித்துள்ளது.
நாளைய தினம் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
நாளை மறுநாள் 6ஆம் தேதியன்று வட கடலோர தமிழகம், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
07.02.2022, 08.02.2022 ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications