இது வெறும் தொடக்கம்தான்.. "500" வரை கூட போகும்.. கவனமாக இருங்க! தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங்!
சென்னை: இது வெறும் தொடக்கம்தான்.. சென்னையில் கனமழை பெய்ய போவதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு வெதர்மன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
நேற்று முதல்நாள் வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து உள்ளது. இன்று தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் தற்போது மழை தீவிரம் அடைந்து உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழை வரை தற்போது பெய்து வருகிறது.

வங்கக்கடல்
தென்மேற்கு வங்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை கடற்பகுதியில் கிழக்கில் உள்ளது. இது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி இலங்கையின் வடக்கு பகுதிக்கு வரும். இதனால் வடதமிழ்நாட்டில் மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும். நேற்று இரவு பெய்தது தொடக்க மழைதான். கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் நேற்று மாலை மழை பெய்தது.

தொடக்கம்
இது வெறும் தொடக்கம்தான். இன்று சென்னையில் நாள் முழுக்க மழை விட்டு விட்டு பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்பின் இது உள்மாவட்ட மழையை அரபிக்கடல் நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. 13ம் தேதி இது அரபிக்கடல் நோக்கி செல்ல வாய்ப்பு உள்ளது. அதனால் இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். இது போனஸ் மழை என்பார்கள். இந்த போனஸ் மழை பொதுவாக கடலோர மாவட்டங்களில் பெய்யும்.

உள்மாவட்டம்
இந்த முறை உள் மாவட்டங்கள், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள், நெல்லையில் கூட நல்ல மழை பெய்யும். சென்னையில் 13ம் தேதி வரை 3 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும். 14ம் தேதிக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக மழை பெய்யும். சென்னையில் இன்று கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 3 நாட்களில் 200- 300 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் சில இடங்களில் 400 - 500 மில்லி மீட்டர் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன்
இன்று மிக கனமழை அல்லது தீவிர கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக, கவனமாக இருக்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் மழையை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூரில் இருந்து சென்னை வரை கனமழை பெய்யும். மழை பகுதிகளான குன்னூர், கொடைக்கானலில் 12, 14ம் தேதிகளில் மழை பெய்யும் வாய்ப்புகளும் உள்ளன, என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications