மேகதாது அணை.. ஒரு போதும் அனுமதிக்க முடியாதென முதல்வர் பேச்சு.. டெல்லி போகும் எடியூரப்பா.. பரபரப்பு
சென்னை: சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதனிடையே மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி பெறுவதற்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா டெல்லி செல்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில், ரூ. 9000 கோடிக்கு புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பெங்களூருக்கு குடிநீர் அளிக்கவும், மின்சாரம் உற்பத்தி செய்யவும் அம்மாநில அரசு முடிவு செய்திருக்கிறது.
தமிழக எல்லைக்கு முந்தைய மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கர்நாடக அரசு கட்டியே தீரும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியிருந்தார்.

தமிழகத்தில் அதிர்ச்சி
மேகதாது அணை விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், இரு மாநிலங்களுக்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பேசியிருப்பது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்தை நிறைவேற்றுவேன்
மைசூரில் கிருஷ்ணராஜசாகர் அணையில் சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு இதை அறிவித்த எடியூரப்பா, மேகதாது அணை கட்டுவதற்கான ஒப்புதல் மத்திய அரசிடமிருந்து விரைவில் பெறப்படும்; கர்நாடகத்தின் பாசனப்பரப்பை பெருக்குவது தான் தமது அரசின் லட்சியம் என்று கூறியிருந்தார்.

முதல்வர் எடப்பாடி பேச்சு
இதற்கு தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழக அரசு மேகதாதுவில் அணைகட்ட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேகதாது அணைக்கு அனுமதி கோரி
இதனிடையே காவிரிக்கு குறுக்கே கட்டப்படும் மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி பெறுவதற்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான குழு டெல்லி செல்லவிருப்பதாக, அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications