பஞ்சாபில் தமிழக மாணவிகள் மீது தாக்குதல்.. உடனே போனைப் போட்ட உதயநிதி! தமிழகம் வரும் வீராங்கனைகள்
சென்னை: பஞ்சாபில் கபடி போட்டியில் கலந்து கொள்ள சென்ற தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழக வீராங்கனைகள் டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பி இருக்கும் நிலையில், பயிற்சியாளரை சிலர் தனி அறையில் வைத்து தாக்கியதாக அணியின் மேலாளர் பரபரப்பு புகாரைக் கூறியுள்ளார்.
2024-25 ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தேசிய அளவிலான கபடி போட்டி பஞ்சாபில் நடைபெற்று வருகிறது. இதில், தமிழகத்தில் இருந்து காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக் கழகம், பெரியார் பல்கலைக் கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதற்காக அவர்கள் தங்கள் அணியில் மேலாளர், தமிழக கபடி அணியில் பயிற்சியாளர்களுடன் பஞ்சாப் சென்றனர். பஞ்சாபில் நேற்று தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்திற்கும் இடையே போட்டி நடந்தது.
அப்போது அன்னை தெரசா பல்கலைக்கழக வீராங்கனை மீது தர்பங்கா பல்கலைக் கழக வீராங்கனை பவுல் அட்டாக் செய்துள்ளார். இதை அடுத்து தமிழக வீராங்கனைகள் இதுகுறித்து நடுவரிடம் முறையிட்டு இருக்கிறார்கள். அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் நடுவரை தாக்கியதாக நினைத்து சக வீராங்கனைகள் தமிழக வீராங்கனைகளை தாக்கியுள்ளனர். மேலும் இதுகுறித்து புகார் அளித்த தமிழக அணியின் பயிற்சியாளரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற போது என்ன நடந்தது என்பது குறித்து அன்னை தெரசா பல்கலைக்கழக அணியின் மேலாளர் கலையரசி விவரித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," கபடி போட்டி நடைபெற்ற போது கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக வீராங்கனை எதிர் அணியை நோக்கி ரெய்டு சென்றார். அப்போது அந்த அணியின் வீராங்கனையை பேக் கிக் செய்த போது தர்பங்கா பல்கலைக்கழக வீராங்கனை நமது வீராங்கனையை அடித்துவிட்டார்.
பதிலுக்கு நமது மாணவியும் அவரை அடித்தார். அப்போது அந்த அணியில் இருந்த வீராங்கனைகள் ஒன்றாக கூடி நமது வீராங்கனையை தாக்கினர். இதை அடுத்து அணியின் மேலாளரான நான், பயிற்சியாளர் பாண்டியராஜன் மற்றும் சக வீரர்கள், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக் கழக அணியினர் அங்கு சென்றோம். அப்போது அங்கும் நிறைய பேர் சேர்ந்து விட்டனர். திடீரென ஐந்து நிமிடத்தில் மாறி மாறி தாக்கினர். அப்ப்போது அங்கிருந்த சிலர் பயிற்சியாளர் பாண்டியராஜனின் சட்டையை பிடித்து அறைக்கு இழுத்துச் சென்று தாக்கினர்.
அவரை பின்பக்கமாக கைகளை பிடித்துக் கொண்டு அறையில் மற்ற இருவர்கள் அவரை தாக்கி இருக்கின்றனர். வெளியிலிருந்து நாங்கள் கத்தியதால் அவர்கள் தமிழக அணியின் பயிற்சியாளரன பாண்டியராஜனை விட்டு விட்டனர் பிறகு நாங்கள் அனைவரும் தனியாக சென்று விட்டோம். சிறிது நேரத்தில் காவல் துறையினர் பாண்டியராஜனை கூட்டிக் கொண்டு போயினர். இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தெரிவித்தேன். உடனே பத்து ஐஏஎஸ் அதிகாரிகள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் என்னிடம் பேசினார்கள். தொடர்ந்து காவல்துறையிடம் பேசி எங்களுக்கு ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்தனர். நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக அங்கிருந்து டெல்லி வந்தோம். டெல்லியில் தமிழ்நாடு விடுதியில் தங்கி இருந்து அங்கிருந்து தமிழ்நாடு வருகிறோம்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications