தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு! வாழ்த்து சொன்ன ஏ.ஆர் ரஹ்மானை வளைத்த பேன்ஸ்! சரமாரி கேள்வி
சென்னை: இந்திக்கு எதிராக ‛தமிழணங்கு' என ‛‛இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்'' எனும் பாரதிதாசன் வரிகளை குறிப்பிட்ட ஏஆர் ரஹ்மான் இன்று தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார். இந்நிலையில் தான் ‛‛தமிழருக்கு தைம்முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு'' எனும் பாரதிதாசன் வரிகளை மேற்கொள் காட்டி நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிறது. 'பிலவ' ஆண்டு விடைபெற்று புதிதாக 'சுபகிருது' புத்தாண்டு பிறந்துள்ளது.
தமிழ் புத்தாண்டையொட்டி பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். தமிழ் புத்தாண்டையொட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஏஆர் ரஹ்மான் வாழ்த்து
அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், நடிகர், நடிகைகளும் பொதுமக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் உள்பட பலர் டுவிட்டர் மூலம் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏஆர் ரஹ்மான் தனது டுவிட்டர் வாழ்த்து செய்தியில், ‛‛இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்'' என குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவை moopillatamizhethaaye எனும் ஹேஷ்டேக்கில் வெளியிட்டு இருந்தார்.

கருத்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்
இதையடுத்து பல்வேறு தரப்பினர் ஏஆர் ரஹ்மானுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் சிலர் திராவிட இயக்கமான திமுகவை பின்தொடர்பவர்கள் இது தமிழ் புத்தாண்டு இல்லை. தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு எனும் வகையில் ஏஆர் ரஹ்மானின் டுவிட்டர் வாழ்த்துக்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாரதிதாசனை மேற்கொள் காட்டி
அதன்படி, சரவணக்குமார் என்பவர், அண்ணா என குறிப்பிட்டு, ‛‛நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரையல்ல உனக்கு தமிழ்ப் புத்தாண்டு அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே அறிவுக்கொவ்வாத அறுபது ஆண்டுகள் தரணியாண்ட தமிழருக்கு தைம்முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு'' என புரட்சி கவிஞர் பாரதிதாசனின் வரிகள் அடங்கிய படத்தை பதிவிட்டுள்ளார். இதேபோல் பலரும் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர்.

ஆண்டின் பெயர் தமிழில் இல்லையே
முருகன்.சி என்ற பயனாளர், ‛‛அண்ணா தமிழ் மக்களுக்கான புத்தாண்டு தை முதல் நாளே. ஆரியர்களின் புத்தாண்டை நாம் ஏன் தூக்கிப்பிடிக்க வேண்டும்'' என கேள்வி எழுப்பியுள்ளார். அலங்கை திருப்பதி என்ற பயனாளர், ‛‛ஒரு ஆண்டின் பெயர் கூட தமிழில் இல்லை இது எப்படி தமிழ் புத்தாண்டு?'' என சித்திரையில் பிறக்கும் ஆண்டின் பெயர்களின் பட்டியலை குறிப்பிட்டுள்ளார். வெற்றி என்ற பயனாளர், ‛‛நோ தலைவா, இன்னைக்கி சமஸ்கிருத புத்தாண்டு'' என தெரிவித்துள்ளார்.

தமிழ் புத்தாண்டு எப்போது
அதாவது தமிழகத்தில் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் திமுக ஆட்சியின்போது தமிழ் புத்தாண்டு என்பது தை முதல்நாள் என கூறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்றாலும் ஒவ்வொரு முறையும் திமுக தலைவர்கள் தை முதல் நாளில் தான் தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த ஆண்டும் கூட பொங்கல் வாழ்த்துடன் முதல்வர் ஸ்டாலின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

திமுக, ரஹ்மான் வெவ்வேறு நிலைப்பாடா
இந்நிலையில் தான் சித்திரை முதல் நாளான இன்று ஏஆர் ரஹ்மானின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு தான் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தி எதிர்ப்பு விவகாரத்திலும், தமிழுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் விஷயத்திலும் ஏஆர் ரஹ்மான், திமுகவுடன் உடன்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வரும் நிலையில் தமிழ் புத்தாண்டில் மட்டும் அவரது நிலைப்பாடு வேறாக இருக்குமோ எனவும் நெட்டிசன்கள் சந்தேகிக்கின்றனர்.

அப்போதும், இப்போதும் பாரதிதாசன்
முன்னதாக ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழி பேச வேண்டும் எனும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த சந்தர்ப்பத்தில் ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் ஒரு டுவிட் செய்திருந்தார். அதில் கருமை நிற பெண் திரிசூலத்துடன் இருக்க, திரிச்சூலத்தின் உச்சியில் தமிழ்மொழியின் சிறப்பு அடையாளமான 'ழ'கரம் இடம் பெற்றிருந்தது. மேலும் ‛தமிழணங்கு' எனவும் ‛‛இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்'' என பாரதிதாசன் வரி குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில் இடம்பெற்றிருந்தது தமிழன்னையின் படம் என்ற தகவலும் பரவியது. இந்நிலையில் தான் ‛‛தமிழருக்கு தைம்முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு'' எனும் பாரதிதாசன் வரிகளை மேற்கொள் காட்டி ஏஆர் ரஹ்மான் டுவிட்டுக்கு பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications